ராஞ்சி;
இஸ்லாமியர் ஒருவரை அடித்துக் கொலை செய்த பசு குண்டர்களுக்கு மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் மத்திய பாஜக அமைச்சர் ஜெயந்த் சின்ஹா வரவேற்பு அளித்த சம்பவம் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் பஜார் டண்ட் பகுதியில் மேற்குவங்க பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஹசாரிபக் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலிமுதீன் அன்சாரி என்பவர் அதனை ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்த வாகனத்தை மறித்த 30 பேர் கொண்ட கும்பல், அலிமுதீனை சரமாரியாகத் தாக்கியது. வாகனத்துக்கும் தீ வைத்தது. இதில் அலிமுதீன் உயிரிழந்தார். இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து விரைவு நீதிமன்றம் மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அண்மையில் ரத்து செய்தது. மேலும் அவர்களுக்கு ஜாமீனும் வழங்கியது.
இதையடுத்து, 8 பேரும் ஹசாரிபாக்கில் உள்ள மத்திய சிவில் விமானபோக்குவரத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஜெயந்த் சின்ஹா, இனிப்பு வழங்கி, பின்னர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஆனால் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: