திருவள்ளூர்,
ஆர்எஸ்எஸ் ஆதரவு சங்பரிவார் கும்பல்களில் ஒன்றான ராம் சேனாவின் மாநிலச்செயலாளர் தனது காருக்கு தானே பெட்ரோல் குண்டு வீசி விட்டு தாக்குதல் நாடகமாடியது அம்பலமாகியிருக்கிறது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் புங்கமேடு பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வந்தவர் காளிக்குமார். இவர்  2015ல் இந்து மக்கள் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். உடனே மாவட்ட இளைஞரணி செயலாளர், வடசென்னை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை பெற்று வசூல்வேட்டை நடத்தி வந்தார். இந்நிலையில் இந்து முன்னணி பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய சங்பரிவார் அமைப்பின் நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அதில் பாஜகவின் பரிந்துரையின் பேரில் காளிக்குமாரும் போலீஸ்பாதுகாப்பை பெற்றார். இதையடுத்து அப்பகுதியில் போலீஸ பாதுகாப்போடு பந்தாவாக சென்று வசூலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில் பல நேரங்களில் ஒயின்ஷாப்பிற்கு சென்ற காளிக்குமார் புல் போதையில் உடன் இருக்கும் பாதுகாவலரை மிகவும் இழிவாக நடத்தி வந்துள்ளார். இப்படி காளிக்குமாரின் பாதுகாப்பிற்கு வந்த காவலர்களில் ஒருவர் காளிக்குமார் ஒயின்ஷாப்பிற்கு சென்று மது அருந்தும் போது தகாராறில் ஈடுபட்டால் அவருக்கு ஆதரவாக மற்றவர்களை தாக்க கூறியிருக்கிறார். இதற்கு மறுக்கவே.. இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் பாதுகாவலர் இதனை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். இருந்தாலும் அரசியல் அழுத்தத்தின் பேரில் தொடர்ந்து காவல்துறையினர் காளிக்குமாருக்கு பாதுகாப்பு அளித்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் அதிக வசூல் செய்து அதனை இந்து மக்கள் கட்சிக்கு உரிய பங்கீடு செய்ய வில்லை என்ற புகார் கட்சிக்குள் எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் இந்து மக்கள் கட்சியில் இருந்து காளிக்குமாரை நீக்கியுள்ளனர். இதையடுத்து காவல்துறை காளிக்குமாருக்கு அளித்து வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்றுக் கொண்டது. இதையடுத்து காளிக்குமார் அனுமான் சேனா என்று சங்பரிவார் கும்பலின் மற்றொரு பிரிவில் இணைந்திருக்கிறார். உடனே அந்த பரிவில் அவருக்கு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் முன்பு போல் காவல்துறை பாதுகாப்போடு பந்தாவாக சென்று வசூலில் ஈடுபடமுடியவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் போலீஸ் பாதுகாப்போடு பந்தாவாக செல்ல வேண்டும், அதே போல் கலவரச்சூழலை உருவாக்கி அதன் மூலம் மீண்டும் கட்சிக்குள் பெரிய தலைவராக வர வேண்டும் என முடிவு செய்திருக்கிறார். இதனை தனது நெருங்கிய நண்பர்களிடம் மோடியே இப்படி வந்தவர்தான் என தனது திட்டத்திற்கு ஆதரவையும் திரட்டியிருக்கிறார். முன்திட்டமிட்ட அடிப்படையில் இன்று செங்குன்றம் அருகில் மீஞ்சூர் வண்டலூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தனது காரில் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்றனர். உடனே எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சோழபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இதே போல் சில தினங்களுக்கு முன்பு தன்வீட்டில் சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாகவும், தான் ( காளிக்குமார் ) என்று நினைத்து என் அண்ணனை தாக்குதல் நடத்தினர் என்றும் மீஞ்சூர் காவல்நிலையத்திலும் ஒரு புகார் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்த போது, கலவரத்தை தூண்டி கட்சிக்குள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள செய்ய திட்டம் என்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் காளிக்குமாரின் ஏற்பாட்டின் பேரில் அவரது ஆட்களே காரில் குண்டு வீசி எரித்தது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து காவல்துறையினர் அவருடன் தொடர்புடைய அத்தனை பேரையும் கையும் களவுமாக பிடித்திருக்கிறது. இதில் மூன்று பேர் மட்டும் இதுவரை அகப்பட்டிருக்கின்றனர். மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். காளிக்குமாரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ், பாஜக, இந்துமக்கள் கட்சி, அனுமான்சேனா உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் ஏற்கனவே தாங்களே குண்டு வைத்து விட்டும், பெட்ரோல்குண்டு வீசி விட்டும் எதிரிகள் தாக்குதல் நடத்தினர் என கூறி கலவர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தென்காசி, மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட நகரங்களில் இந்த அமைப்புகளின் பிரமுகர்களின் கலவர திட்டமும், தாக்குதல் நாடகமும் அம்பலமாகியிருக்கின்றனர். இந்நிலையில் திருவள்ளூரில் தற்போது அம்பலமாகியிருக்கிறது. தமிழக முழுவதும் இது போல் திட்டங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் ஏதாவது ஒரு இடத்தில் இப்படிப்பட்ட ஏற்பாட்டில் கலவரம் ஏற்பட்டால் அதனை சாக்காக வைத்து தமிழகத்தில் மிகப்பெரிய கலவரத்தை அரங்கேற்றி அதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடலாம் என்பதும் ஆப்பரேசன் திராவிடத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது என கூறப்படுகிறது.
,

Leave a Reply

You must be logged in to post a comment.