===இல.சண்முகசுந்தரம்===

‘‘இந்தியாவின் பெரும்பாலான போக்குகளை நான் நேர்மறையானதாகவே பார்க்கிறேன். ஆனால், எனக்குப் பெரிய ஏமாற்றமாக உள்ளது எதுவெனில், இந்தியாவின் கல்வி அமைப்பே ஆகும். அது இன்னும் சிறந்ததாக மாற வேண்டும்.’’
-பில்கேட்ஸ்

இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018 (பல்கலைக்கழக மானியக்குழுச் சட்டம் நீக்கம்) என்
றொரு மசோதாவை வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்திய மருத்துவச் சட்ட மசோதா 2017 உடன்இணைத்து நிறைவேற்ற உள்ளது மத்திய பாஜக அரசு.அதென்ன அடைப்புக்குறிக்குள் ஒரு சட்ட நீக்கத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள் என்று தோன்றலாம் அதுவும் மேற்படி மசோதாவினுள் பாஜக அரசு கொண்டு வரும் வார்த்தைகளே ஆகும்.

சரி, இருக்கும் சட்டத்தை நீக்கிவிட்டு ஏன் புதியதோர் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும்? அந்தப் பழைய சட்டத்திலேயே தேவையான புதிய மாற்றங்களைக் கொண்டு வரலாமே, அதில் என்ன தடை? அப்படியெனில் பழைய சட்டம் 1956 முதல் 52 ஆண்டுகள் நடப்பில் இருந்துள்ளதே, அதில் என்னென்ன குறைகள் உள்ளன, மொத்தமாய் புதியதோர் சட்டம் தேவைப்படும் அளவுக்கு
உயர் கல்வித்துறையில் என்னென்ன மாற்றங்களைச் செய்யப்போகிறோம் என அரசு ஏன் மக்களிடம் எதையும் வெளிப்படையாய் சொல்லவில்லை?

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்று பல சட்டங்கள் போட்டு ஆணையங்களை ஏற்கெனவே உருவாக்கியிருக்கிறார்கள். ஆணையம் என்றால், அதன் அரசியல் பொருளாதார அர்த்தம், அதில் ‘அரசு தலையிடாது’ என்பதே ஆகும். இது நிர்வாக ரீதியாக செய்யப்படும் வார்த்தை மாற்றமோ அல்லது புதிய தேவைகளுக்காக கொண்டு வரப்படும் சட்டமாற்றமோ அல்ல. அரசின் கொள்கை முடிவு மாற்றங்களை மக்களிடம் நேரடி
யாகச் சொல்வதற்கு மாற்றாக, ஏமாற்றி ஜோடனை செய்து திணிக்கும் மோசடியான அரசியல் கொள்கை மாற்றங்களே ஆகும்.

நவீன பொருளாதாரக்கொள்கை அமல்படுத்தப்பட்ட 1990 காலங்களையொட்டி ஏற்படத் துவங்கிய மாற்றங்களே இவையாவும். அதற்கு முன்னர் ஆணையம் என்றால் தன்னாட்சி பெற்ற அமைப்பு என்ற நிர்வாக அர்த்தம் மட்டுமே உண்டு. ஆனால், 1990களுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட எல்லா ஆணையங்களும் பெருமுதலாளிகளுக்குச் சேவை செய்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்புகளே ஆகும்.

இந்த அனுபவங்களையெல்லாம் இந்திய உயர்கல்விச் சட்டம் 2018 ( பல்கலைக்கழக மானியக்குழு சட்ட நீக்கம்)- க்கு பொருத்திப் பார்த்தால், பாஜக அரசு உயர்கல்வித்துறையில் என்ன செய்யப் போகிறது என்பது புரிந்துவிடும்.உயர்கல்வித்துறையில் அரசு செய்யவேண்டிய ஒரே பெரும் தலையீடு நிதி ஒதுக்கலே ஆகும். இன்று வரை இந்தியாவில் 8.5 ( 2011 கணக்கீட்டின்படி) சதவீதமானோர்தான் உயர்கல்வி பெற்றுள்ளனர்.

ஒரு நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கழிந்தபின்னரும், அடுத்தடுத்த தலைமுறைக்குக் கூட உயர்கல்வி கிடைக்கவில்லையெனில், அரசு அதை பரவலாக்கத் திட்டமிடவில்லை என்றுதானே அர்த்தம்.ஆனால், இப்போது என்ன செய்கிறார்கள்? நிதியை அதிகப்படுத்துவது குறித்தோ அல்லது அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அதிகமாக்கப்படுவது குறித்தோ பேசத்தயாரில்லை. மாறாக, ஏற்கெனவே உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவை (யுஜிசி) நீக்கி
விட்டு, தரமான உயர்கல்விக்காக புதிய ஆணையம் என்கிறார்கள்.

பல்கலைக்கழக மானியக்குழு என்ற பெயரிலேயே ‘மானியம்’ என்றொரு வார்த்தையும் இருக்கிறதே, அது ஏன் புதிய மசோதாவில் நீக்கப்பட்டிருக்கிறது? சுருக்கமாய் சொல்வதென்றால், இனி உயர்கல்விக்கு அரசு நிதி ஒதுக்காது என்பதே புதிய சட்டம் சொல்லும் செய்தியாகும். காசுள்ளவர்கள் சுயமாக படித்துக்கொள்ளலாம், இல்லையெனில் வங்கியில் கடன் வாங்கிப் படித்துக்கொள்ளலாம் என்பதே இனி இந்திய அரசின் ஒற்றை வரியிலான உயர்கல்விக்கொள்கையாகும்.

இதுவரை அரசியல் தலையீடு இல்லாமல் கல்வி நிறுவனத்தின் தேவை எனும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்பட்ட நிதி, இனி அரசியல் தலையீடுகளோடு சில குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் செல்லப்போகிறது என்று அர்த்தம். அப்படியெனில் பல்கலைக்கழகங்கள் என்னாகும்?
ஆரம்பத்தில், தரமான பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே அரசின் நிதி என்பார்கள். அப்புறம் அதையும் பறித்துவிட்டு எந்தப் பல்கலை.க்கும் இனி அரசின் நிதி கிடையாது என்று அறிவித்துவிடுவார்கள். அப்போது நாம் எதுவும் செய்யமுடியாது.

ஏனெனில், அரசு பின்வருமாறு சொல்லும்; இந்திய உயர்கல்வி ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு. அதன் முடிவுகளில் அரசு தலையிடமுடியாது. கல்விக்கு நிதி கேட்பவர்கள் தரமில்லாதவர்கள். தரமான உயர் கல்வி நிறுவனங்கள் அரசின் நிதியில் செயல்பட விரும்புவதில்லை, தரமான கல்வி நிலையத்தில் சேர எவ்வளவு கட்டணம் இருந்தாலும் மாணவர்கள் தயார் என்பதே ஆணையம் ஆய்வு செய்து எடுத்துள்ள முடிவு என்றே அரசும், ஆய்வாளர்களும் சொல்லுவார்கள்.

நெடுஞ்சாலை, தொலைத்தொடர்பு, ரயில், மின்சாரம் ஆகிய துறைகளின் விஷயத்தில் இன்று நடப்பதுதான் நாளை இந்திய உயர்கல்வி ஆணையத்திலும் நடக்கும்.

1.மாநில உயர்கல்வித்துறையின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, நடுவண் அரசின் உயர்கல்வி ஆணையமே பிரதான அதிகாரமுள்ள அமைப்பாக மாறும். மாநிலஅரசால் பல்கலைக்கழகம் துவங்குவது கூட தடைபடும்.

2. மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு இப்போது கிடைக்கும் நிதி இனி மொத்தமாய் தடைபடும்.

3.தரம் உயர்த்தப்போகிறோம் என்று சொல்லி சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களை கபளீகரம் செய்து காலப்போக்கில் தனியாரிடம் அளிக்க
வகை செய்வார்கள்.

4. ஐஐஎம், ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி, தொழிற்படிப்பு மையங்கள், ஜவஹர்லால் பல்கலைக்கழகம் போன்ற அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் படிப்படியாக அரசு-தனி
யார் கூட்டு நிறுவனங்களாக மாற்றப்பட்டு, இறுதியில் மொத்தமாக தனியார் நிறுவனமாகவே மாற்றப்படும்.

5. லாபத்தில் இயங்காத உயர்கல்வி நிறுவனங்கள் மூடப்படும். அது மத்திய பல்கலைக்கழகமாக இருந்தாலும் சரி அல்லது வடகிழக்கு மாநிலத்தில் உள்ள என்ஐடியாக இருந்தாலும் சரி, காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்து என்பதுதானே பெருமுதலாளி
யின் சேவை நோக்கம். 1990களுக்குப் பின்பு எந்த முதலாளி தனது சொந்தக் காசில் கல்வி நிறுவனம் நடத்தியிருக்கிறான்? ஏன் அந்த மத்தியப் பல்கலைக்கழகம் மூடப்பட்டது என்றால், அது அரசின் முடிவல்ல ஆணையத்தின் முடிவு என்று அரசு சொல்லும்.

6. தமிழ், வரலாறு, புவியியல் போன்ற துறைகள் வேலை வாய்ப்புகளே இல்லாத துறைகள் என்றாகிவிடும். இலவசம் என்று சொன்னாலே, இப்படிப்புகளுக்கு பலரும்
முன்வராத போது, லட்சங்களில் கட்டணம் கட்டி தமிழையும், வரலாறையும் யார் படிப்பர்?

7. வேலைவாய்ப்புப் படிப்புகள் என்ற பெயரில் சமூக நோக்கமேயில்லாத புதிய பட்டப்படிப்புகளை முழுவதும் சுயநிதிக்கட்டணத்தில் துவங்குவார்கள். கட்டணக் கொள்ளை ஒருபக்கமெனில், வேலைவாய்ப்பு எனும் பெயரில் கார்ப்பரேட் அடிமைக் கனவான்களை உருவாக்கும் கல்வி முறையினால் ஏற்படப்போகும் சமூகச் சீரழிவு இருக்கிறதே, அதுதான் பேரழிவைக் கொண்டு வரப்போகும் பெரும் திட்டங்களாகும்.

8. ஐஐடிக்களுக்கும், என்ஐடிக்களுக்கும் புதிய தரம் உயர்ந்த நுழைவுத்தேர்வு உருவாக்கப்படலாம். நீட் போன்ற தேர்வு வருமெனில் பள்ளிக்கல்வியும், தேர்வுப் பயிற்சிக்கல்வியும் இன்னும் வியாபாரமாக்கப்படும். மொத்தத்தில், ஏழைகளுக்கு இனி அங்கே இடமில்லை என்றாக்கப்படும்.

9. அந்நியப் பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து நமது பல்கலைக்கழகங்களும் தரமான அறிவியல் மற்றும் வேலைவாய்ப்புக் கல்வியைக் கொடுக்க முற்படும். விளைவு..? கட்டணம் உயர வழிவகுப்பார்கள். அப்புறம்,நமது மண்ணுக்கேற்ற அறிவியல், சமூகச் சிந்தனை
களை முற்றிலும் அழித்துவிட்டு ‘தரமான அறிவையும்’ அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்வார்கள்.

10. உயர்கல்வியில் ஏற்படவிருக்கும் இத்தகைய அந்நிய நாட்டுச் சேவை மற்றும் கார்ப்பரேட் வேலை வாய்ப்புகளுக்கானதாக இந்தியப் பள்ளிக்கல்வியும் அதன் உள்ளடக்கத்தில் மொத்தமாய் மாற்றப்படும். கல்வியின் நோக்கமே கார்ப்பரேட் சேவை மட்டும்தான் என்றாக்கப்படும்.

ஆக, ஒரு தேசத்தின் தற்சார்பு வளர்ச்சிக்கான மனிதவளமேம்பாடு எனும் நோக்கத்திலான கல்வி மொத்தமும் கார்ப்பரேட் வள மேம்பாட்டுக்கான கல்வியாக மாறப்
போகிறது என்பதே நாம் எதிர்கொள்ளப்போகும் பெரும் ஆபத்தாகும்.
இந்திய கல்வித்துறையில் இருக்கும் ஜனநாயகத்தன்மை மொத்தமும் அழிக்கப்பட்டு வியாபாரத் தன்மை எல்லா மட்டங்களிலும் நிறுவப்படும் எனில், தேசத்தின் எதிர்காலம் என்னாகும்?

தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படும் என்றார்கள். ஆனால், வகுப்பறையே கார்ப்பரேட்டால் தீர்மானிக்கப்பட்டால்…? பில்கேட்ஸ் சொல்வதை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்… சட்டம் யாருக்கென புரிந்துவிடும்!

Leave A Reply

%d bloggers like this: