அரூர் அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாலபாரதியை செய்தியாளர்கள் சந்திக்கையில், “சேலம் -சென்னை பசுமை வழிச் சாலைக்கு பாப்பிரெட்டிபட்டி பகுதி கிராமங்களில் உள்ள மலைவாழ்மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலம் வீடு வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. இதனால், இந்த மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது” என்றார்.

பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்த மாநில அரசின் மாவட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஆனால் இத்திட்டம் குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் மக்களுக்கு முறையாக தெரிவிக்கவில்லை. இத்திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கவில்லை. நிலம் கையகப்படுத்துவது குறித்து நோட்டீஸ் அனுப்பவில்லை. உரிய கால அவகாசம் வழங்கவில்லை. சட்டதிட்டத்தை மதிக்க வில்லை என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.

விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் பாதிக்காமல் மாற்று வழியில் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும். கால அவகாசம் வழங்கி விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும். நில அளவை செய்யும் போது தனியார் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் அளவீடு செய்துள்ளனர். ஆனால் விவசாய நிலங்களிடம் வரும்போது பாரபட்சம் காட்டுகிறார்கள். பாதிக்கப்படும் மக்களை சந்திக்க விடாமல் அறிவிக்கப்படாத அவசரகால நிலை அமல்படுத்தியது போன்று ஆட்சியாளர்களும் காவல்துறையும் நடந்துகொள்கிறது .இது ஜனநாயக விரோத செயல் என்றும் அவர் எச்சரித்தார்.

பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளை ஒன்று திரட்டி போராடுவோம். தமிழக அரசும் வருவாய்த்துறையும் காவல்துறையை வைத்து அடக்குமுறை செய்வது கண்டிக்கத்தக்கது. விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. தமிழக அரசின் செயல் கோழைத் தனமானது என்றும் கே. பாலபாரதி கடுமையாக சாடினார்.

Leave A Reply

%d bloggers like this: