உனது அடிச்சுவட்டில் நானும்…….

சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்….
தேனாம்பேட்டை காவல் நிலையம்.
மாணவர் இயக்கத் தலைவர் உமாநாத் எங்கே?
தெரியாது என்கிறான் அந்த இளைஞன்
இடியாய் இறங்குகிறது அடி.
சுமார் ஒரு மணி நேரம் அதே கேள்வி, அதே பதில் அதே அடி.
அடித்து ஓய்ந்த காவல்நிலைய ஆய்வாளர் ஒரு காவலரை அழைத்து அவனுக்கு சாப்பாடு வாங்கிக் கொடு என்கிறார்.
உணவு வந்ததும் தரையில் சுருண்டு விழுந்த இளைஞன் எழுந்து மெல்ல சாப்பிடத் தொடங்குகிறான்.
சாப்பிட்டு முடித்தவுடன், எதிரில் நாற்காலியில் அமர்ந்திருந்த காவல்நிலைய ஆய்வாளரைப் பார்த்து, ‘ஒரு சிகரெட் கிடைக்குமா?’ என்கிறான்.
அதிர்ந்து போனார் ஆய்வாளர்.
அடுத்த நாள்
கைதிகளை சைதாப்பேட்டையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அந்த இளைஞனின் கையோடு கடுமையான தோல் வியாதி பீடித்திருந்த மற்றொரு கைதியின் கையோடு சேர்த்து ஒரே விலங்கிட்டு அண்ணா சாலை வழியே சைதாப்பேட்டைக்கு இழுத்துச் செல்கின்றனர்.
மருத்துவமனையில் அமர்ந்திருக்கின்றனர். அங்கிருக்கும் ஊழியர் இளைஞனின் அருகில் வந்து மெல்லிய குரலில் கேட்கிறார்: “நீ கம்யூனிஸ்டா?”
ஆம் என்கிறான் இளைஞன்.
சிறிது நேரத்தில் அந்த மருத்துவமனை ஊழியர் தேனீர்க் கோப்பையுடன் அருகில் வந்து இளைஞனிடன் கொடுக்கிறார்.
இளைஞன் தேனீரை அருந்தத் தொடங்கும் போது அந்த ஊழியர் ஒரு அவனைப் பார்த்து, “நானும் கம்யூனிஸ்டுதான்” என்று சொல்லிவிட்டு புன்னகையுடன் நகர்ந்து செல்கிறார்.

பத்து வருடங்களுக்கு முன் பின்னிரவு நேரம் 1.30க்கு அந்த இளைஞனின் உயிர் பிரிந்தது.
சிந்தனையில் இளைஞனாகவே இருந்து ஜூலை 8, 2008ல் மறைந்த அந்த 83 வயது இளைஞனின் பெயர்: பி. ராமச்சந்திரன்.
என் தந்தை. தத்துவ ஆசான். தோழன்.

Leave a Reply

You must be logged in to post a comment.