சென்னை;
ரேசன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் குறித்து சட்டமன்றத்தில் உண்மைக்கு புறம்பாக பேசிய உணவுத்துறை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ரேசன் கடைகளில் அனைத்து நாட்களும், அனைத்து பொருட்களையும் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி. சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த திங்களன்று சட்டமன்றத்தில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும், அனைத்து நாட்களிலும் வழங்கி வருவதாக கூறியுள்ளார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ரேசன் கடை ஆய்வு ஒன்றை நடத்தியது. 33 மாவட்டங்களில் 636 ரேசன் கடைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் 14 மாவட்டங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோட்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தவறு என்று அந்த மாவட்ட ஆட்சியர் வாதிட்டு எங்களோடு சவால் விட்டார். ஆனால் களத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாம் சொன்ன குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்த பின் தவறுகளை ஒப்புக்கொண்டார். இந்த செய்தி பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது.

தூத்துக்குடி கருங்குளத்தில் ரேசனில் பொருட்கள் வழங்காமலேயே குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவமும் மாதர் சங்க ஆய்வில் கண்டறியப்பட்டு அதற்கான ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது. வடசென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு மையத்திற்கு அமைச்சரே நேரடியாக வந்து 100 சதவீத பொருட்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும் 100 நாள் வேலையில் பல மாவட்டங்களில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டும், கூலியும் சரிவர வழங்கப்படுவதில்லை. துவரம் பருப்புக்கு பதிலாக மைசூர் பருப்புதான் வழங்கப்படுகிறது. உளுத்தம் பருப்பை ரேசனில் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டது. பச்சரிசி இருந்தால் புழுங்கல் அரிசி இல்லை. அது இருந்தால் இது இல்லை என்ற நிலையே பல ரேசன் கடைகளில் நீடிக்கிறது.

கடந்த காலங்களிலும், ஏன் தற்போதும் கூட பல கிராமங்களில் கள நிலவரங்கள் இவ்வாறு இருக்க, முற்றிலும் உண்மைக்கு புறம்பாக சட்டமன்றத்தில் அமைச்சர் பேசியுள்ளார். இதனை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ரேசன் கடைகளில் அனைத்து நாட்களும், அனைத்து பொருட்களையும் வழங்கும்படி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.