சென்னை;
தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை, பருப்பு, சத்துமாவு விநியோகித்துவரும் கிறிஸ்டி நிறுவனத்தில், வெள்ளியன்று வருமான வரித் துறை சோதனை இரண்டாவது நாளாக நடைபெற்றது.

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை விநியோகித்து வருகிறது கிறிஸ்டி ஃபிரைடுகிராம் எனும் நிறுவனம். சத்துணவுத் திட்டத்துக்கான ஒப்பந்தம் கிறிஸ்டி நிறுவனத்துக்குக் கிடைத்ததில், சுமார் 120 கோடி ரூபாய்க்கு மேல் கைமாறியதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து, வியாழன் காலை முதல் கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள் உட்பட 76 இடங்களில் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியானது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி, வெள்ளியன்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குமாரசாமி நண்பர் ஜெயப்பிரகாஷ் நடத்திவரும் அக்னி பில்டர்ஸ் நிறுவனத்திலும் வருமான வரித் துறை சோதனை நாமக்கல் மாவட்டம் காதம்பட்டி மற்றும் கருப்பட்டிபாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. கிறிஸ்டி நிறுவனத்தின் ஆடிட்டர் ராமகிருஷ்ணன் சங்கர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையின்போது, முட்டை கொள்முதலில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் கைமாறிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சத்துணவு திட்ட ஒப்பந்தம் கிடைத்ததில் சில அமைச்சர்களுக்குத் தொடர்பிருப்பதாகவும், அவர்களும் விரைவில் வளைக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: