பதான்கோட்:
கதுவா வழக்கில், தன்னை சிறுவனாக கருத வேண்டும் என்ற குற்றவாளி ஒருவரின் கோரிக்கையை பதான்கோட் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, பாஜக-வைச் சேர்ந்த கும்பலால், கடந்த ஜனவரி மாதம் மிகக் கொடூரமான முறையில் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கு பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் சிறுவர் என்பதால், அவர் மீதான விசாரணை கதுவா மாவட்ட சிறுவர் நீதிமன்றத்திலேயே நடைபெறுகிறது.இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற 7 பேரில், பர்வேஷ் குமார் (எ) மன்னு என்பவர், தன்னையும் சிறுவராக கருதி சிறுவர் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என கோரினார். இதையடுத்து, அவருக்கு எலும்பு சோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனை நடத்த பதான்கோட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் குமாருக்கு சுமார் 20 வயது இருக்கும் என கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, பர்வேஷ் குமாரை சிறுவனாகக் கருத முடியாது என்றும் வயதுக்கு வந்தவராகக் கருதி இந்த நீதிமன்றத்திலேயே விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி ஜே.கே. சோப்ரா வியாழனன்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.