கோயம்புத்தூர்;
உலகத் தமிழ் இணைய மாநாடு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வெள்ளியன்று துவங்கியது.

‘உத்தமம் என்கிற’ உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் 1997 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு வெள்ளியன்று கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துவங்கியது. “அறிவுசார் தமிழ்த் தேடுபொறிகள்” என்ற தலைப்பில் மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம், பயிற்சி பட்டறை என மூன்று பிரிவுகளில் மாநாடு நடைபெறுகிறது. ஆய்வரங்கத்தில் இயல்மொழிப் பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள், இணையப் பாதுகாப்பு, தொழில்நுட்ப யுகத்தில் தமிழ் வகுப்பறைகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆராய்ச்சியாளர்கள் வழங்க உள்ளனர்.

சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து 160க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மக்கள் அரங்கத்தில் பொதுமக்களுக்கும், மாணவருக்கும் அலைபேசிகளுக்கான தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம், முப்பரிமாண அச்சு, குறுஞ்செயலி உருவாக்கப் பயிற்சி, கணினி சார்ந்த பயிற்சிகள், இணையம் சார் பயிற்சிகள் ஆகியவை அளிக்கப்பட உள்ளது.

இந்த கண்காட்சி அரங்கில் மழலையர் பள்ளியிலிருந்து, பல்கலைக்கழகம் வரை எல்லோரும் பயன்பெறும் வகையில் பலகைக் கணினி முதல் அனைத்துக் கருவிகளும் தமிழ்க் கருப்பொருளுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஜூலை 8 ஆம் தேதி (ஞாயிறு) வரை இம்மாநாடு நடைபெறுகிறது.

முன்னதாக, இம்மாநாட்டை உத்தமம் நிறுவனத்தின் தலைவர் பிரான்ஸ் பேராசிரியர் எ.முருகையன் துவக்கி வைத்து பேசினார். இதனையடுத்து வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயசந்திரன், முனைவர் மு.ஆனந்தகிருட்டிணன் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.