திருவனந்தபுரம்; 
கேரளத்தில், நகை, ஜவுளிக் கடைகள், ஷாப்பில் மால்கள் போன்றவற்றில் தொழிலாளர்கள் உட்கார்ந்து வேலை செய்வதற்கு சட்டத் திருத்தம் கொண்டு வர கேரள அரசு முடிவு செய்துள்ளது.இதன்மூலம், நகை மற்றும் துணிக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வது உறுதிப்படுத்தப்படுகிறது.நாடு முழுவதுமே நகை மற்றும் ஜவுளிக்கடைகள், ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை பார்க்கும் ஆண்கள், பெண்கள் ஆகிய இருதரப்பினருமே காலையிலிருந்து இரவு வேலை முடியும் வரை 12 மணி நேரம் கால்கடுக்க நின்றுகொண்டுதான் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. வாடிக்கையாளர் இல்லாத சூழ்நிலையிலும் கூட நின்றுகொண்டுதான் இருக்க வேண்டும் என்று சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

சுமார் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக நின்றுகொண்டே இருப்பதால் தொழிலாளர்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பதால், அவர்கள் மற்றவர்களை விடவும் அதிகமான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.
இதனால், தாங்கள் அமர்ந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்து 2013-ஆம் ஆண்டே பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் அவர்கள் போராட்டத்தைத் துவங்கினர்.

தொழிலாளர்களின் இந்த போராட்டத்திற்கு கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு, கொள்கை ரீதியாக தங்களின் ஆதரவைத் தெரிவித்ததுடன், கேரள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சட்டப்படி, ஒவ்வொரு தொழிலாளரும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்ய ஏற்கெனவே உரிமை இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியது.எனினும், வணிக நிறுவனங்கள் தொழிலாளர் சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்கச் செய்யும் வகையில், வணிக நிறுவனங்களின் சட்டம் 196-இல் திருத்தம் செய்வது என்றும் தற்போது முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், உட்கார்ந்துகொண்டே வேலை செய்வதற்கான உரிமை விரைவில் சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை கேரள நகை மற்றும் துணிக்கடைக தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: