இந்தியாவில் வால்மார்ட் ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தின் மூலம் ரூ 3 லட்சம் கோடி வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் முன்னணி அமெரிக்க சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் 77 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 16 பில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனம் சுமார் 2 பில்லியன் டாலரை வரியாக இந்திய அரசுக்கு செலுத்த உள்ளது. இந்த ஒப்பந்தத்தை வால்மார்ட் நிறுவன மிக முக்கியமானதாக கருதுகிறது. இதன்மூலம் இந்தியாவில் 50பில்லியன் டாலர் அளவிற்கு வருமானம் ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரி சட்டத்தின் பிரிவு 9(1)ன் படி எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் இந்தியாவிலுள்ள ஏதாவதொரு நிறுவனத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை கொண்டிருந்தால் அந்நிறுவனம் இந்திய நிறுவனமாகவே கருதப்படும் மற்றும் வரி அமைப்பும் அதற்கேற்றாற்போலே அமையும் எனவும், இதனால் வால்மார்ட் நிறுவனம் சில சலுகைகளை பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் ஆரம்ப நிலையாக 21 இடங்களில் தனது கடைகளை தொடங்க முடிவு செய்துள்ளது. அதில் 19 இந்தியாவின் முக்கிய நகரங்களில் 9 மாநிலங்களை இணைக்கும் விதமாக அமைக்கவுள்ளது.

இந்தியாவில் தற்போது தனது ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொண்டு வரும் மற்றொரு அமெரிக்க நிறுவனமான அமேசான் சிறந்த தொழில்நுட்பங்களை வைத்திருந்த போதிலும் இந்திய நிறுவனமான பிளிப்கார்டே முன்னணியில் இருந்து வந்துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டும் இந்தியாவின் 75% சதவீத ஆன்லைன் விற்பனை சந்தையை கைபற்றி உள்ளன.

ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகத்தால் இந்தியாவில் இருக்கும் சிறு வணிக நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்மார்ட் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இந்தியாவின் சில்லரை வர்த்தகம் அனைத்தும் கேள்விகுறியாகும் நிலை உருவாகும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.