மதுரை;
ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் திவ்யபாரதி. இவர் ‘ஒருத்தரும் வரேல’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே ‘கக்கூஸ்’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

இவர் தாம் இயக்கிய ஆவணப்பட டிரெய்லரை கடந்த ஜூன் 28-ஆம் தேதி யூடியூபில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ஜூலை 3-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் சாதாரண உடையில் வந்த 13 பெண் காவலர்கள் உட்பட 20 பேர் இவரது வீட்டைச் சூழ்ந்து கொண்டனர். வீட்டில் திவ்யபாரதி உள்ளாரா எனக்கேட்டு கெடுபிடி செய்துள்ளனர். தகவலறிந்து இவரது வீட்டின் அருகில் வசிக்கும் வழக்கறிஞர் ஒருவர் தலையிட்டு திவ்யபாரதியை அழைத்துச் செல்வதற்கு ஏதாவது வாரண்ட் வைத்துள்ளீர்களா எனக்கேட்டுள்ளார். அதற்கு காவல்துறையினர் பதிலேதும் சொல்லாமல் சென்றுவிட்டனர்.

தம்மை காவல்துறையினர் தேடி வருவது அறிந்த திவ்யபாரதி பெரம்பலூரிலிருந்து மதுரைக்கு திரும்பி வந்து மாவட்ட நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் தமது வழக்கறிஞர் பணியை வழக்கம் போல் செய்துகொண்டிருந்துள்ளார். அப்போது சேலம் நகர் காவல்துறையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திவ்யபாரதியின் இரு சக்கர வாகனச் சாவியை பறித்துள்ளார். தகவலறிந்து மற்ற வழக்கறிஞர்களும் வரவே காவல்துறை அதிகாரி பின் வாங்கிக் கொண்டார்.

இந்த நிலையில் காவல்துறையினர் தம்மை கைது செய்வதற்கு தடைவிதிக்க வேண்டுமென ஜூலை 4-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திவ்யபாரதி மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் பிரபுராஜதுரை, லஜபதிராய் ஆகியோர் ஆஜராயினர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு குறித்து சில விளக்கங்கள் தேவைப்படுவதாக கூறினார். இதையடுத்து நீதிபதி திவ்யபாரதியை இரண்டு நாட்கள் கைது செய்வதற்கு தடைவிதித்து வழக்கை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு ஜூலை 6-ஆம் தேதி மீண்டும் நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு உட்பட்ட வரம்பில் திவ்யபாரதி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நீலகிரி மாவட்டம் கூடலூரில் அவர் வெளியிட்ட ஆவணப்பட டிரெய்லர் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

153 (ஏ) பிரிவு உள்ளிட்ட மற்றும் சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்ற முழுமையாக தகவல் எனக்குத் தெரியவில்லை. என பதிலளித்தார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுவாமிநாதன், கூடலூரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுக் கொள்ளுங்கள். பத்து நாட்களுக்கு திவ்யபாரதியை கைது செய்ய தடைவிதிக்கிறேன் எனக்கூறி வழக்கை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.