சேலம்;
சென்னை – சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழக அரசின் அடக்குமுறையை மீறி ஜூலை 6 வெள்ளியன்று அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தை சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் நடத்தினர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எட்டு வழி சாலை அமைப்பதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் போதிலும், காவல்துறையினர் மிரட்டலுடன் நிலம் அளவீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஜூலை 6 ஆம் தேதியன்று அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி வெள்ளியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டனர். இதன்பின் விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பியவாறு எட்டு வழிச் சாலைக்கான அரசாணை நகலை எரித்தனர். இதனையடுத்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தி, அனைவரையும் கைது செய்ய முயன்றனர். இதனால் விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பி.தங்கவேலு, பொருளாளர் அன்பழகன், சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன், ஏஐகேஎம் செயலாளர் அய்யந்துரை, சந்திரமோகன், ஏஐகேஎஸ் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், ராமசாமி, நடராஜ் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் பெ.சண்முகம் உள்பட 44 பேரை சிறையில் அடைத்துள்ளனர்.

திருவண்ணாமலையில் விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் டி.ரவீந்திரன் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.டில்லிபாபு தலைமையிலும், தர்மபுரியில் மாநிலத் துணைத் தலைவர் கே.முகமது அலி தலைமையிலும் அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.