புதுதில்லி, ஜூலை 5-

நெல் மற்றும் இதர விவசாயப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைகளை அறிவித்திருப்பதன்மூலம் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமினாதன் அவர்களின் பரிந்துரைகளை நிறைவேற்றிவிட்டோம் என்று மத்திய அரசாங்கம் மோசடியான முறையில் கூறிக்கொண்டிருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

விவசாயப் பொருள்களின் உற்பத்திச் செலவினத்தை எப்படிக் கணக்கிட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில்  அதற்கும் மேல் விவசாயிகளுக்கு 50 சதவீதம் லாபம் வைத்து, குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் எம்.எஸ். சாமினாதன் ஆணையம் கூறியிருக்கிறது.

உற்பத்திச் செலவினங்கள் கடுமையாக உயர்ந்து விவசாயிகள் கடன்வலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்போது, விவசாயத்தின் முக்கியமான அம்சங்களை எல்லாம் மோடி அரசாங்கம் வேண்டுமென்றே கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல், பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் உட்பட பல மாநில அரசாங்கங்கள் சென்ற ஆண்டு நிர்ணயித்த அளவைவிட, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச உற்பத்திச் செலவை மோடி அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளது என்பது மிகவும் குரூரமான நகைச்சுவையாகும்.

சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி விவசாயிகள் பெறக்கூடிய தொகைக்கும், தற்போது மோடி அரசாங்கம் அறிவித்துள்ள தொகைக்கும் இடையே, மிகப்பெரிய இடைவெளி மற்றும் இழப்பு காணப்படுகிறது. நெல்லுக்கு சுமார் 600 ரூபாயும், இதர தான்யங்கள், நிலக்கடலை மற்றும் கரும்புக்கு 1800 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரைக்கும் இடைவெளி காணப்படுகிறது.

மேலும், இந்தத்தொகையைக்கூட விவசாயிகள் பெறுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் கிடையாது. ஏனெனில் மத்திய அரசாங்கம் தன்னுடைய கொள்முதல் நடவடிக்கைகளை வேண்டுமென்றே வெட்டிக்குறைத்துள்ளதால், விவசாயிகள் தங்கள் விவசாய விளைபொருள்களை அவற்றைத் தனியாரிடம் கேட்கும் விலைக்கு விற்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

விவசாயிகள் மத்தியில் மோடி அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்துள்ள அதிருப்தியைத் திசைதிருப்பும் முயற்சியே தவிர இது வேறொன்றும் இல்லை.

விவசாயிகளில் பெரும்பாலானவர்கள், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள். இவர்கள் எம்.எஸ். சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் மற்றும் பல நியாயமான கோரிக்கைகளுக்காகவும் நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள மோசடியை, விவசாயிகள் மத்தியில் தோலுரித்துக்காட்டிடும், மத்திய அரசின் விவசாய விரோத, விவசாயிகள் விரோத நடவடிக்கைகளுக்காக விவசாயிகள் மேற்கொள்ளும் அனைத்துப் போராட்டங்களுக்கும் தன் ஆதரவினை விரிவுபடுத்திடும்.”

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.