கோவை,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மூன்றாவது நாளாக வியாழனன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊழியர்களை எவ்வித விளக்கமும் கோராமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் செவ்வாய்கிழமை முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டம் வியாழனன்று மூன்றாவது நாளாக தொடர்ந்தது. இதன் ஒருபகுதியாக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கோவைமாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் சக்திவேல், முத்துராஜ், செந்தில்குமார், சாஜி உள்ளிட்டோர் உரையாற்றினார். இதில் ஊராக வளர்ச்சித்துறை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஈரோடு:
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ப.ரவிச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் பாஸ்கர்பாபு, அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் வெங்கிடு, வட்டக்கிளை செயலாளர் சுகுமார், பொருளாளர் ரங்கசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் என்.மணிபாரதி, சிஐடியு சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். திரளானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முடிவில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் வே.திருவேரங்கன், மாவட்டச் செயலாளர் ஜான் ஆன்ஸ்டின், மாநில செயற்குழு உறுப்பினர் வடிவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.