திருப்பூர்,
மும்பையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும் 2ஆவது சர்வதேச ஜவுளித் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கண்காட்சியைக் காண வருமாறு பின்னலாடை மற்றும் விசைத்தறி ஜவுளித் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2015ஆம் ஆண்டு முதலாவது கண்காட்சி வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், நான்காண்டுகளுக்குப் பின் 2ஆவது கண்காட்சியை ஜனவரி 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மும்பை கண்காட்சி மையத்தில் ஏற்பாடு செய்திருப்பதாகஇந்திய சர்வதேச ஜவுளி இயந்திர கண்காட்சி அமைப்பின் (இண்டியா இட்மி) தலைவர் ஹரிசங்கர்கூறினார்.

திருப்பூரில் செவ்வாயன்று இது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசியஹரிசங்கர் மேலும் கூறியதாவது: ஜவுளித் தொழிலின் வளர்ச்சி இயந்திரத் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தது. ஜவுளித் தொழிலில் நூற்பாலை, துணி, பிராசசிங், பின்னலாடை என அனைத்து தொழில் பிரிவுகளுக்கும் உலகளாவிய நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்களை ஒரே கூரையின் கீழ் அறிமுகம் செய்வதற்கு இக்கண்காட்சி உதவும். தொழில் சார்ந்த இயந்திரங்களை, தொழில்நுட்பங்களைப் பெற வெளிநாடுகளுக்கு சென்று வர தொழில்துறையினருக்கு அதிக செலவாகும். இங்கு நேரடியாக இந்திய ஜவுளித் துறையினர் பயன்பெறலாம்.

முதலாவது கண்காட்சியில் 12நாடுகளைச் சேர்ந்த 285 நிறுவனங்கள் தங்கள் இயந்திர, தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தினர். அப்போது 32 நாடுகளைச் சேர்ந்த30 ஆயிரம் பார்வையாளர்கள் அதைகண்டு களித்தனர். குறிப்பாக இயந்திர வர்த்தகர்கள், தொழில் துறையினர் மட்டுமின்றி 17 நாடுகளின் அரசுப்பிரதிநிதிகள், தூதுவர்களும் பங்கேற்றனர். தற்போது சிறு, நடுத்தர தொழில் துறையினர் பயனடையும் நோக்கில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இம்முறை 18 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 450 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கண்காட்சியின் ஒரு பகுதியாக ஜவுளித் தொழிலின் பல்வேறு பிரிவுகள் சார்ந்த கருத்தரங்கங்களுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. அத்துடன்மாணவர்களும் இக்கண்காட்சியை கண்டு ஜவுளித் தொழில்நுட்ப, இயந்திர கல்வி சார்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எத்தியோப்பியா, கானா, போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா, டான்சானியா, பெனின், டாகோ, தெற்கு சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். சர்வதேச ஜவுளிசந்தையில், புதிதாக வளரும் மையமாக ஆப்பிரிக்கா திகழும் என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் இது உள்நாட்டு ஜவுளித் துறையினருக்கு மிகுந்த பயனளிக்கும். அதுமட்டுமின்றி எகிப்து, வங்கதேசம், கொரியா, உஸ்பெக்கிஸ்தான், ஈரான், இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் வருகின்றனர். எனவே திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார ஜவுளித்தொழில் துறையினர் இக்கண்காட்சிக்கு வருகை தந்து பார்வையிட்டு பயனடையுமாறு ஹரிசங்கர் கேட்டுக் கொண்டார். இதில் இந்தியா இட்மி செயல் இயக்குநர் சீமா ஸ்ரீவத்சவா, பொருளாளர் கேத்தன் சங்வி, உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.