சென்னை,
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய திமுக உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “மதுரை மத்திய தொகுதிக்குட் பட்ட பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் காலியாக உள்ள இடத்தில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைத்து கொடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி, “மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட, பழைய சென்ட்ரல் மார்க்கெட், மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றப்பட்டதால், தற்போது நகரின் மையப் பகுதியில், போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது. தற்போது பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் காலியாக உள்ள இடத்தில், வாகனங்களை நிறுத்த ஏதுவாக, பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள, ரூ. 24 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதில், 118 நான்கு சக்கர வாகனங்களும், 1,601 இரு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு ஏதுவாக திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, பணிகள் முடிக்கப்படும்” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.