சென்னை;
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜனநாய கம் இல்லை என்றும் தூத்துக்குடி என்ற
வார்த்தையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதாகவும் திமுக செயல்
தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதுவரையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி செல்லாதது ஏன் என்று அவரும் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும் கேள்வி எழுப்பினர்.

மத்திய பாஜக, மாநில அதிமுக அரசு களின் அடக்குமுறையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜூலை 5 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஜனநாயக உரிமை போராட்டங்களை ஒடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சட்டமன்றத்துக்குச் செல்வது என்பது வீண்தான். ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் பேசவே விடுவதில்லை. தூத்துக்குடி என்ற வார்த்தையையே சொல்லமுடியாத நிலைசட்டமன்றத்தில் உள்ளது. தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதியில்லை. மக்கள் பிரச்சனைகளை பேசவும் சட்டசபையில் அனுமதி இல்லை. சேலம் போராட்டத்தை எப்படியாவது ஒடுக்கவேண்டும் என்று அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது.

எட்டுவழிச் சாலையை அனைவரும் ஏற்றுக்கொண்டு விட்டதாக முதல்வர் தவறான தகவலைத் தெரிவித்து வருகிறார். இந்தத் தகவலை பாதிக்கப்பட்ட மக்கள் முன்னால் போய் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக்கொண்டேன். இதுவரை அவர் செல்லவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில்,பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பிறகு 49 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று சட்டமன்றத்திலேயே அமைச்சர் தெரிவித்துள்ளார். அப்படியிருக்கும் போது பசுமை வழிச் சாலை அமைந்தால் மட்டும் வளர்ச்சி ஏற்பட்டு விடுமா. அங்கெல்லாம் புதிய தொழிற்சாலைகள் வரப் போகின்றனவா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகத்திலே தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிற உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். அந்த பணத்தை கேட்டு வாங்கி தாழ்த்தப்பட்ட மாணவர்களை பாதுக்காக்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் முடங்கிக்கிடக்கின்றன. கடல்நீரை குடிநீராக மாற்றுகின்ற திட்டம் அதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இப்படி தமிழகத்தின் பல கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத மோடி அரசு சொல்வதை மட்டும் தமிழக அரசு செயல்படுத்துவது என்ன நியாயம் என்றும் சாடினார்.

இரா.முத்தரசன்
இரா. முத்தரசன் பேசுகையில், தமிழகத்திலே அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை பிரகடனம் நடைமுறையில் உள்ளது. திடீர் திடீர் என பலர் கைது செய்யப்படுகிறார்கள், சிறையிலடைக்கப்படுகிறார்கள். அதேபோல் பத்திரிகைகள் ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன.
எதிர்கட்சிகளின் செய்தியை வெளியிடக் கூடாது என ஊடக நிறுவனங்களுக்கும், பத்திரிகை நிறுவனங்களுக்கும் மத்திய மாநில அரசுகள் நெருக்கடி கொடுக்கின்றன.

எதிர்கட்சிகளின் செய்திகள் வெளியிடப்பட்டாலும் சென்சார் செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. முதலமைச்சர் வெளியிடுகிற பொய்யான அறிக்கைகள், தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறும் பொய்யான, தவறான கருத்துக்கள் இவைதான் திரும்பத் திரும்ப வெளியிடப்படுகின்றன என்று குற்றச்சாட்டினார்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வேல்முருகன் நாகர்கோவிலிலே இருக்கிறார். சீமான் திருச்சியிலே இருக்கிறார். இயக்குநர் கவுதமன் சிறையில் இருக்கிறார். வளர்மதி என்ற கல்லூரி மாணவி பத்திரிகையாளர்களை சந்தித்தார் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சைதாப்பேட்டையில் காவல் துறைக்கு எதிராக கருத்து கூறினார் என மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கைது. இப்படிப்பட்ட கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சர்வாதிகார முறையில் அதிமுக அரசு அடக்குமுறையை ஏவி விடுகிறது. எனவே ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த உண்ணாநிலை போராட்டத்தை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பங்கேற்ற தலைவர்கள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் கே.ரவிக்குமார், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல்சமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தின், கண்ணன் (மக்கள் அதிகாரம்) உள்ளிட்ட பலரும் பேசினர். உண்ணாநிலை போராட்டத்தை முடித்து வைத்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
இதில் சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர்கள் நா.பெரியாசாமி, சி.மகேந்திரன், சுப்புராயன், பத்மாவதி, சந்தானம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ஏழுமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.