புதுதில்லி;
தில்லி துணை நிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் அடங்கிய அரசியல் சாசன அமர்வு புதனன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், “தில்லியைப் பொறுத்தவரை அரசின் அனைத்து முடிவுகளிலும் தலையிடும் உரிமை துணை நிலை ஆளுநருக்கு இல்லை. அமைச்சர்களின் ஆலோசனைகளுடனும் உதவியுடனும் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், துணை நிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இதன் பின்னராவது. அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடுவதை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நிறுத்தவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லி குறித்த தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என ஊடக செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் கிரண் பேடி கூறியுள்ளார். மேலும், துணை நிலை ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்குப் பொருந்தாது என சட்டக்குறிப்புகளை மேற்கோள் காட்டி ஆளுநர் கிரண் பேடி வாட்ஸ் அப் மூலம் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
கிரண்பேடி மீது நாராயணசாமி சாடல்

இந்நிலையில், வெள்ளியன்று மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
ஆளுநர் கிரண்பேடி, உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தில்லிக்கு மட்டும் தான் பொருந்தும்; புதுச்சேரிக்கு பொருந்தாது; அந்த தீர்ப்பில் அரசியலமைப்பு சட்டம் 239 ஏ, புதுச்சேரிக்கு பொருந்தாது என்பதால், இந்த தீர்ப்பு முழுமையாக தில்லிக்கு தான் என்ற தவறான கருத்தை, வாட்ஸ் ஆப் மூலம் பதிவு செய்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 239 ஏ, 240 புதுச்சேரிக்கு பொருந்தும். ஒட்டு மொத்த தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது எனக்கூற முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என சோலி சொரப்ஜி கூறியுள்ளார்.
அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கலாம். ஆய்வுக்கூட்டம் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாங்கள் அனுப்பும் கோப்பை விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பக்கூடாது. அப்படியே ஒப்புதல் அளிக்க வேண்டும். இது தான் தீர்ப்பு.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.