சென்னை;
திருவெறும்பூர் பர்மா காலனி மற்றும் திடீர் நகர் பகுதிகளில் குடியிருப்பவர்களை அகற்றுவதை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என டி.கே.ரங்கராஜன் எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளருக்கு எழுதிய கடிதம் வருமாறு:
மேற்கண்ட காலனியில் வசித்து வருபவர்களுக்கு அடிப்படை கட்டுமான வளர்ச்சி திட்டங்களுக்காக அவர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற வேண்டுமென்று வெளியேற்று நோட்டீஸ் தங்கள் துறையால் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மக்கள் அந்தப்பகுதியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலையும், சமூக வாழ்க்கையைம் அப்பகுதியில் ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் சமூகத்தில் மிக ஏழ்மையான பிரிவைச் சார்ந்தவர்களாக உள்ளனர். வளர்ச்சிக்காக இதைச் செய்யும்போதிலும் அத்தகைய வளர்ச்சியானது மக்களுக்கு இன்னல்களை தராத வகையில் இருக்க வேண்டும்.

இது சம்பந்தமாக, முந்தைய ரயில்வே அமைச்சர் பன்சால் மாநிலங்களவையில் கூறும்போது, இத்தகைய குடியிருப்பாளர்களுக்கு மறுவாழ்வுத் திட்டத்தினை வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டார் என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகிறேன்.

சமூகத்தின் மிக எளிய பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனையை அணுகுமாறு வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Leave A Reply

%d bloggers like this: