அகர்தலா;
திரிபுராவில் பாஜக – ஐபிஎப்டி கூட்டணி உடைவது உறுதியாகியுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக இரண்டு கட்சிகளுமே அறிவித்துள்ளன.

திரிபுராவில் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறியில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரிவினைவாதக் கட்சியான ஐபிஎப்டி கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்தது. மக்கள் மத்தியில் பொய்களைப் பரப்பி, அதிகாரத்தையும் கைப்பற்றியது. ஆனால், ஆட்சிக்கு வந்தது முதற்கொண்டே பாஜக – ஐபிஎப்டி இடையே பிரச்சனைகள்தான்.
குறிப்பாக, 2 வாரியங்களுக்கு தங்களை ஆலோசிக்காமலேயே உறுப்பினர்களை நியமித்து விட்டதாக பாஜக மீது ஐபிஎப்டி குற்றம் சாட்டியது. அண்மையில், திரிபுராவிலுள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கு பாஜக தன்னிச்சையாக தேர்தல் பார்வையாளர்களை நியமித்ததும் ஐபிஎப்டி கட்சியை அதிருப்திக்கு உள்ளாக்கியது.இதுதொடர்பாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. பாஜக – ஐபிஎப்டி கூட்டணி தொடருமா? என்று கேள்விகள் எழுந்தன. பாஜக செய்தித் தொடர்பாளர் மிருணாள் காந்தி, பத்திரிகையாளர்கள் கேட்டபோது ‘அனைத்துத் தேர்தல்களிலும் ஐபிஎப்டி கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவதாக எந்த ஒப்பந்தமும் கிடையாது’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலுடன் அந்த கட்சியுடனான கூட்டணி முடிந்து விட்டது என்றும் தெரிவித்தார்.

இது ஐபிஎப்டி கட்சியை கடும் அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கவே, தற்போது அந்த கட்சியும், பாஜக-வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திரிபுராவில் 2019 மக்களவைத் தேர்தலில், திரிபுரா மக்கள் முன்னணி (ஐபிஎப்டி) தனித்தே போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.
இதன்மூலம் இந்த இரு கட்சிகள் இடையிலான கூட்டணி ஏறக்குறைய உடைந்து விட்டதாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.