திருப்பூர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3 ஆவது மாவட்ட மாநாட்டில் தலித் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானங்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் நேரில் முறையிடப்பட்டது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், மாவட்டப் பொருளாளர் ஏ.பஞ்சலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியை வியாழனன்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.இதில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள தாட்கோ தொழிற்கூடங்களை உரிய பயனாளிகளுக்கு ஒதுக்கிட வேண்டும். காலி இடத்தில் அடுக்குமாடி தொழிற் கூடங்களைக் கட்டி திருப்பூர் பகுதி இளைஞர்களுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை மீது அரசு நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.இம்மாவட்டத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் அரசாணை எண் 51, 52 (பழைய எண் 92)ன்படி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை பற்றிய விபரத்தை சம்பந்தப்பட்ட துறையில் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார். ஆதி திராவிட மாணவ / மாணவியர் தங்கும் விடுதிகளில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவும், மலைவாழ் மாணவர்கள் தங்கிப் பயில திருமூர்த்தி மலையில் அரசு மாணவர் தங்கும் விடுதி தொடங்கிடவும் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

தலித் மக்களின் இல்ல நிகழ்ச்சிகளை நடத்திட மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபங்கள் கிடைப்பதை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, திருப்பூர் தெற்கு வட்டத்திற்குட்பட்ட தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சி கொடுவாய் பகுதியில் 8 திருமண மண்டபங்களில் தலித் மக்கள் இல்ல விழாக்கள் நடத்துவதற்கு தர மறுப்பதன் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசின்சமுதாயநலக் கூடங்கள், ஊராட்சிகளின் தளவாடப் பொருட்கள் போட்டு வைக்கும் குடோன்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆகவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் ஆய்வு செய்து உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு விடும் வகையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

காங்கேயம் தாயம்பாளையத்தில் தலித் மக்களுக்கு முடிவெட்ட மறுக்கப்படுகிறது. தக்க நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயில் முன்பு சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் உருவச் சிலை அமைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. கலப்பு மணத் தம்பதியருக்கு உதவிட மாவட்ட அளவில் உதவிக் குழு அமைக்கப்பட வேண்டும். சாதி மறுப்பு/கலப்பு மணத் தம்பதியருக்கு சாதி ஆதிக்க சக்திகளால் ஏற்படும் அச்சுறுத்தல், தாக்குதல் ஆகிய பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொள்ள, மாவட்டந்தோறும் அவசர உதவித் தொலைபேசி எண் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் / மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரைக் கொண்ட உதவிக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். கலப்பு மணம் செய்த தம்பதிகளுக்கு மத்திய அரசு வழங்கும் அம்பேத்கர் திருமண உதவித் திட்டம் பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. அதனையும் விளம்பரப்படுத்தி, பயனாளிகளுக்குக் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும்.

அவினாசி பேருந்து நிலையம் அருகில் அருந்ததிய மக்களுக்கு சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு 15 சென்ட் இடம் தமிழக அரசால் வழங்கப்பட்டது. அதற்கு “அருந்ததியர் சமூக அறக்கட்டளை” என்ற பெயரில் பட்டா வழங்கிட வேண்டும்.இம்மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு கட்டடங்களில் உள்ள கழிப்பறை உள்ள செப்டிக் டேங்க் அல்லது பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்திட மனிதர்களைப் பயன்படுத்துவதை தடை செய்திட வேண்டும். கேரள அரசைப்போல் எந்திரங்களைப் பயன்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.இந்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தாக நிர்வாகிகள் கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.