திருச்சிராப்பள்ளி:
சிஐடியு மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சம்மேளன செயலாளர்கள் கூட்டம் புதனன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது.

சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், செயலாளர் கோபிகுமார் ஆகியோர் உரையாற்றினர். துணை பொதுச்செயலாளர் திருச்செல்வன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்தியில் ஆளும் மோடியின் அரசை அகற்றிட ‘மோடியே வெளியேறு’ என்ற முழகத்தை முன்வைத்து அகில இந்திய அளவில் ஆகஸ்ட் 9 அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுகிறது.தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இந்திய நாட்டு சுதந்திரத்திற்காக போராடிய தொழிலாளர் தலைவர்களின் நோக்கங்களை நினைவூட்டும் வகையில் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி இரவு ‘மோடியே வெளியேறு’ என்கின்ற முழக்கத்துடன் அன்றிரவு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்திய உழைக்கும் வர்க்கத்தின் மீது மத்திய மோடி அரசு தொடுக்கும் தாக்குலை கண்டித்து வரும் செப்டம்பர் 5ம் தேதி தில்லியில் தொழிலாளர், விவசாயி, விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெறுகிறது.

இந்த பேரணியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பேரைத் திரட்டுவது; ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் இடங்களில் தெருமுனை கூட்டங்கள், பிரச்சாரங்கள், கருத்தரங்கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் சிஐடியு திருச்சி மாவட்ட செயலாளர் சம்பத், மாவட்ட தலைவர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.