தீக்கதிர்

சத்துணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனத்தின் 70 இடங்களில் திடீர் சோதனை..!a

நாமக்கல்;
அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு விநியோகிக்கும் கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்திலும், அந்நிறுவனத்தோடு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் வியாழனன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டி பாளையத்தில் கிறிஸ்டி ஃபிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் அரசுப்
பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு  விநியோகிக்கிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்திலும், சென்னை யிலும், பெங்களூருவிலும் அந்நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் வியாழனன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல போலி நிறுவனங்களை உருவாக்கி, முட்டை, பருப்பு, சத்தணவு மாவு விநியோகம் செய்தது போல கணக்கு காட்டியுள்ளது என்ற புகாரின் அடிப்படையில் இந்த நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
நாமக்கல் திருச்செங்கோடு அருகே கிறிஸ்டி நிறுவனத் திலும், அதன் உரிமையாளர் குமாரசாமி வீட்டிலும் காதப்பள்ளி, வேப்பநத்தம், கருப்பட்டிபாளையம் ஆகிய இடங் களில் கிறிஸ்டி நிறுவனத்தின் முட்டை குடோன்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ராசிபுரம் அத்தனூரில் கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான ராசி நியூட்ரி ஃபுட்ஸ் என்ற சத்துணவு மாவு தயாரிக்கும் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்றது.

சென்னையிலும் கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தோடு தொடர்புடைய 37 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேலம், கோவை மாவட்டங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

குமாரசாமியும், அவர்களது நண்பர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் பல கோடி ரூபாய் கருப்பு பணத்தைப் பதுக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.