கோவை,

மாநகராட்சி நிர்வாகத்தின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபனை விடுதலை செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஊழியர்கள்போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து காவல்துறையினர் விடுதலை செய்தனர்.

கோவையில் சிறுவாணி குடிநீர் திட்டம் கம்யூனிஸ்ட்களின் முன்முயற்சியில் கோவைக்கு கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும். கேரளத்தில் இ.எம்.எஸ்.நம்பூதிரி முதல்வராக இருந்த போது, அன்றைக்கு கோவை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவருமான பூபதி  கோவை நகர் மன்ற தலைவராக இருந்த போது அவரின்  முன்முயற்சியில் சிறுவாணியில் இருந்து கோவைக்கு குடிநீர் கொண்டு வரும் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டமே கோவையின் பிரதான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் திட்டமாக தற்போது வரை இருந்து வருகிறது.

இந்த சிறுவாணி குடிநீர், பில்லூர் குடிநீர், அத்திகடவு உள்ளிட்ட திட்டங்களின் மூலம் கோவை மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் திட்டங்களின் குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்பு , மேலாண்மை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கோவை மாநகராட்சி பிரெஞ்சு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது. இது கோவை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

குடிநீர் விநியோகம் தொடர்பாக சூயஸ் நிறுவனத்தோடு கோவை மாநகராட்சி மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை வெளியிடுமாறு கோவை மாநகராட்சி ஆனையர் விஜயகார்த்திகேயனை சந்தித்து சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் மனு அளித்தார். ஆனால் அப்படியான ஒப்பந்த நகலை வெளியிட முடியாது என மாநகராட்சி ஆனையர் சொன்னதோடு மரியாதை குறைவான வார்த்தைகளில் பேசியுள்ளார். இதனையடுத்து மக்களின் அத்தியவசிய தேவையான குடிநீர் பிரச்சனை குறித்த ஒப்பந்தம் போட்டு ஆறு மாத காலமாகிறது.

இது குறித்து மக்கள் பிரதிநிதிகள் கட்சியினர் தெரிந்து கொள்ளக்கூடாது என்கிற சர்வாதிகாரத்தை கண்டிக்கிறேன். நீங்கள் ஒப்பந்த நகலை வெளியிடும்வரை மாநகராட்சியின் வளாகத்தில் காத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து தரையில் அமர்ந்தார். இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சி.பத்மநாபன் கைது செய்யப்பட்டு உக்கடம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையறிந்து கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராம்மூர்த்தி, நடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் பத்மநாபன் கைது செய்யப்பட்டதையறிந்து நூற்றுக்கணக்கான சிபிஎம் மற்றும் சிஐடியு ஊழியர்கள் உக்கடம் காவல்நிலையத்தில் திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும், குடிநீர் ஒப்பந்தம் குறித்த நகலை வெளியிட வேண்டும் என்கிற முழக்கத்தை எழுப்பினர். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் ஊழியர்கள் வந்தவண்ணமே இருந்தனர். இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த காவல்துறையினர் காவல்நிலைய ஜாமீனில் விடுதலை செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், மாநகராட்சியின் புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பினையில் வெளிவரக்கூடிய வழக்கு என்கிற வகையில் 188 அரசு அதிகாரியின் உத்தரவுக்கு கிழ்படியாமை மற்றும் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த்து 353 ஆகியபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பிணையில் விடுவித்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து விடுதலை செய்யப்பட்டவுடன் திரண்டிருந்த ஊழியர்கள் ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து சூயஸ் நிறுவனத்தோடு மாநகராட்சி குடிநீருக்காக போடப்பட்ட ஒப்பந்த நகலை பெற்று மக்களுக்கு இதுகுறித்து தெளிவு படுத்தும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என கட்சியின் தலைவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.