திருவனந்தபுரம்:
கேரள மாநில கல்லூரிகளில் திருநங்கையருக்கு கூடுதலாக இரண்டு இடங்களை ஒதுக்கீடு செய்ய, அம்மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு உத்தரவிட்டுள்ளது.
சமூகப் பிரச்சனைகள் காரணமாக, திருநங்கையர் தங்கள் படிப்பைப் பாதியிலே நிறுத்துகின்றனர் அல்லது ஒரு கல்வியாண்டுக்கு பிறகு அல்லது மாணவர் சேர்க்கை முடிந்த பிறகே, கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கின்றனர். இந்நிலையில், கல்வி பெற முடியாத திருநங்கையர்க்கு உதவும் வகையில் அவர்களுக்கான இடங்களை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கேரள கல்வித்துறை கூறியுள்ளது.உயர்கல்விக்கான சிறந்த வாய்ப்புகளைத் திருநங்கையருக்கு வழங்குவதன் மூலம், அவர்களைச் சமுதாயத்தில் முன்னிலைக்குக் கொண்டு வர முடியும் என்பதன் அடிப்படையிலும், சமூகநீதித் துறையின் பரிந்துரை பேரிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான ஆய்வின்படி, மாதம் ரூ. 1,000 அல்லது அதற்குக் குறைவான பணத்தில்தான் 50 சதவிகித திருநங்கையர் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் என்பதால், சமன்வாயா என்ற மாநில எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் படிக்கவரும் திருநங்கையருக்குத் உணவு, தங்குமிடத்துடன், உதவித்தொகையும் வழங்கும் திட்டத்தை ஏற்கெனவே கேரள அரசு கொண்டு வந்துள்ளது. அதனையும் தற்போது கல்வித்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.