விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள வி.சாத்தப்பாடி கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இம்மக்களின் குடிநீர் தேவைக்காக சாத்தப்பாடி ஊராட்சி சார்பில் ஆழ்துளை மோட்டாருடன் கூடிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆழ்துளை மோட்டார் பழுதானது. இதனால் புதிய ஆழ்துளை மோட்டார் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விநியோகிக்கப்படும் குடிநீர், கடந்த சில வாரங்கலாக கலங்கலாக வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். இது குறித்து கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வி.சாத்தப்பாடி கிராம பெண்கள் விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave A Reply