சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை(ஜூலை 5) பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர்-அமைச்சரவை, நிதி, ஓய்வூதியங்கள், பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தம் ஆகிய துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக உறுப்பினர் கே.என். நேரு பேசியது வருமாறு:-சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பலர் இன்றைக்கும் ஏழ்மையில் இருக்கிறார்கள். ஒருவர் பெட்டிக் கடை நடத்தி வருவதாக செய்தி வந்துள்ளது. எனவே, அவர்களை பாதுகாக்க ஓய்வூதியத்தை மேலும் அதிகப்படுத்த வேண்டும், மருத்துவப் படியையும் உயர்த்த வேண்டும்.

திருச்சியில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி சிலை கடந்த ஏழு வருடமாக திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. அதை உடனடியாக திறக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிசி) உள்ளதால்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு ஓரளவுக்கு கிடைத்து வருகிறது. அதுவும் தற்போது கேள்வி குறியாகிவிட்டது. அதற்கு காரணம், தொகுதி 1 தேர்வில் நடந்த முறைகேடாகும். இந்த முறைகேட்டை மூடிமறைக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதில் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக் கப்படுவார்கள். அமைச்சர் ஜெயக்குமார்: உறுப்பினர் தெரிவித்த இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.

மேலும் அவர்கள் நான்கு பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அண்ணாநகரில் உள்ள அரசு மையத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை தங்களின் நிறுவனத்தில் படித்து தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்துக்கொள்கிறார்கள். இந்த தவறை செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த நிறுவனமாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். (அமைச்சர் தெரிவித்த அந்த நிறுவனங்களின் பெயர்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன) நேரு: அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் இதுவரைக்கும் நடைமுறைக்கு வரவில்லை. விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படவில்லை. அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: மூன்று வருவாய் பிரிவுகளாக பிரித்து வீடுகள் கட்டப்படுகிறது. விதிமுறைகளுக்கு மாறாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை. நேரு: ஆசிரியர்-அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். ஒரு நபர் சீர்திருத்த குழுவை கலைக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியமே தொடரவேண்டும். அரசு அலுவலகங்களில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமாக காலிப் பணியிடங்கள் உள்ளதை நிரப்ப வேண்டும். அமைச்சர் ஜெயகுமார்: அரசுத் துறையில் காலியாக உள்ள இடங்களில் இதுவரை 2,35,835 பேர் பணி அமர்த்தப் பட்டுள்ளனர். பழைய ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறீதர் குழுவின் அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சீர்திருத்த குழு தனது பணியை துவக்கிவிட்டது. ஆறு மாதத்தில் அரசுக்கு அறிக்கை கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.நேரு: ரூ. 3.14 லட்சம் கோடியாக இருந்த கடன் தொகை தற்போது ரூ. 3.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வட்டியும், பற்றாக்குறையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு எப்படி மீளப்போகிறது.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழக அரசு பெற்றுள்ள கடனை திரும்ப செலுத்தும் அளவிற்கு சக்தி உள்ளது. தற்போதைய தமிழக கடன் அளவு மாநில உற்பத்தியில் 22.29 விழுக்காடாக ஆக உள்ளது. கடன் அளவு கட்டுக்குள் உள்ளது. இது எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது. புதிய திட்டங்களால் மூலதனம் மற்றும் அதன் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: