தீக்கதிர்

கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய வளர்ச்சிக்கு ஆபத்து…!

புதுதில்லி;
கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தாக இருக்கும் என்று மூடீஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.மூடீஸ் நிறுவனம் 175 முதலீட்டாளர்களைக் கொண்டு இக்ரா நிறுவனத்துடன் இணைந்து மும்பை மற்றும் சிங்கப்பூரில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்தக் கருத்துக் கணிப்பில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தாக இருக்கும் என்றும், 3.3 சதவீத நிதிப் பற்றாக்குறையை எட்டக்கூடிய ஆபத்தும் இருப்பதாகவும் பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதனம் வழங்க அரசு எடுத்துள்ள தீர்மானம் போதாது என்றும், வங்கிகளால் திட்டமிட்டபடி மூலதனத்தைத் திரட்ட முடியவில்லை என்றும் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூடீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களின் கருத்துகளைப் போலவே, கச்சா எண்ணெய் விலை உயர்வால் வளர்ச்சிக்குப்
பாதகம் ஏற்படும் என்றே நாங்களும் கருதுகிறோம். எனினும், பெட்ரோல், டீசல் மீதான மானிய சீர்திருத்தங்களால், கச்சா எண்ணெய்யால் ஏற்பட வேண்டிய ஆபத்துகள் அண்மை ஆண்டுகளில் குறைக்கப்பட்டுள்ளன. திரவ பெட்ரோலிய வாயு (எல்.பி.ஜி) மற்றும் மண்ணெண்ணெய்க்கு மட்டும் இன்னும் மானியம் வழங்கப்படுவதில்லை. வங்கிகளுக்கு மூலதனம் வழங்கும் அரசின் முயற்சிகளில் திட்டமிட்டபடி வங்கிகளால் புதிய மூலதனங்களைத் திரட்ட முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.