சென்னை
சட்டப்பேரவையில் வியாழனன்று (ஜூலை 5) கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்,“ இம் மாதம் 3 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் டி.ஜி.பி. நியமனத்துக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யை தொடர்ந்து 2 வருடங்கள் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பியாக 2 வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள் ளார். இது பிரகாஷ்சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. இது போன்ற நியமனங்களால் டி.ஜி.பி.யாகும் இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கனவும் நிறை வேறாமல் போகிறது. மூத்த அதிகாரிகள் பலர் டி.ஜி.பி. பதவியை பெற முடியாமலேயே ஓய்வு பெறும் நிலை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப் படி தற்போதைய டி.ஜி.பி. 2 வருடங்கள் பதவி வகிப்பது தவறு. எனவே, அவரது பதவி உயர்வை ரத்து செய்து புதிய டிஜிபியை நியமிப்பதோடு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும்.

இனி இது போன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார். இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,“ காவல் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம், பிரகாஷ் சிங் மற்றும் பலர் தாக்கல் செய்த வழக்கில் 3.7.18 அன்று தன்னுடைய இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணு கோபால், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள் மட்டுமே காவல் துறை தலைமை இயக்குநர் நியமனத்திற்கு தேர்வுப் பட்டியலை தயாரிக்க மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு கருத்துருக்களை அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டார்” என்றார். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றித் தான் தமிழ் நாட்டில் காவல்துறை தலைமை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம் தற்போது இடைக் கால உத்தரவில் வழங்கியுள்ள புதிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வரும் காலங்களில் பின்பற்றும். காவல்துறை தலைமை இயக்குநர் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து 2 ஆண்டு காலம் இருக்க வேண்டும். தற்போதைய டிஜிபி நியமனம் சட்டத்திட்ட விதிகளுக்குட்பட்டுத்தான் செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.