உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிமுக அரசு மறுப்பதால் தமிழகத்தில் ஒன்றரையாண்டுக்கும் மேலாக ஊரக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிப்போய் விட்டன. இது குறித்து ஆட்சியாளர்களுக்கு அக்கறையேதுமில்லை. தமிழகத்தில் 140
ஆண்டுகள் காணாத வறட்சியை மக்கள் எதிர்கொண்டபோதும் தமிழக அரசு பெரிதாக கவலைப்படவில்லை. மத்திய அரசின் வாலாக மாநில அரசு இருந்தபோதும் வர்தா புயல் பாதிப்பு, வறட்சி நிவாரணம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, போன்றவை குறித்து அழுத்தம் ஏதும் தரவில்லை தமிழக அரசு. குடிநீருக்காகப் போராடிக் கொண்டிருந்த மக்களின் பிரச்சனை இயற்கையாக பொழிந்த மழையால் ஓரளவுக்கு மட்டுப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் முடங்கியுள்ளதால் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, சுகாதார வசதி ஆகியவை சரிவர கிடைக்கப் பெறாமல் வழக்கம் போல் எளிய மக்களே வெகுவாக பாதிக்கப் பட்டு வருகின்றனர்.

ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற அமைப்புகளில் ஏற்கெனவே பணிபுரிந்து வரும் அலுவலர்களையே தனி அலுவலர்களாக தமிழக அரசு நியமனம் செய்து பணி புரிந்து வருவதால் ஏற்கெனவே உள்ள பணிச்சுமையுடன் நிர்வாகப் பணிகள் கூடியுள்ளன. போதாக்குறைக்கு காலியாக இருக்கும் கீழ்நிலைப் பதவிகள் முதல் மேல் நிலைப்பதவிகள் வரை பூர்த்தி செய்யப்படாமல் உள்ளதால் விரக்தியில் பணி புரிந்து வருகின்றனர் அலுவலர்கள். வழக்கமாக ஒதுக்கீடு செய்யப்படும் மாநில நிதிக்குழு ஒதுக்கீடு தொகையை ஒதுக்காமல் பல மாதங்களாக காலம் தாழ்த்தித் தாழ்த்தி வருகிறது அரசு. இதனால் கீழ்மட்ட ஊழியர்களின் ஊதியம் கேள்விக் குறியாகி ஊதியமின்றி பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படும் அவல நிலை. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் ஆழமாகப் பரிசீலித்துப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துறை செயலாளரும் கூடுதல் தலை
மைச் செயலாளருமான ஹன்ஸ்ராஜ்வர்மா, துறை இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் கூட்டு சேர்ந்துசெயல்படுகின்றனர். மாநில அளவிலான எல்.இ.டி. பல்புகள், குடிநீரைச் சுத்தப்படுத்த குளோரின் மாத்திரைகள் திடக்கழிவு மேலாண்மை கொட்டகைகள் ஆகியவற்றைத்தரமின்றி ஒட்டுமொத்த கொள்முதல் செய்வதும் அப்பரிவர்த்தனையில் பெருந்தொகையைப் பங்கு போடுவதுமாக உள்ளனரே ஒழிய உள்ளாட்சி நிர்வாகத்தில் எவ்வித அக்கறையும் செலுத்தாமல் காலம் கழித்து வருகின்றனர்.

இது இத்துறை ஊழியர்களை வெந்த புண்ணிலே வேலைப்பாய்ச்சியது போலானது. இதனால் அமைப்பு ரீதியாகப் போராடிய ஒவ்வொரு முறையும் வெற்று வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வந்தனர் உயர் அலுவலர்களும் அமைச்சரும். ஊழியர்களின் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. ஊதிய உத்தரவாதமில்லை. சொந்தப் பணத்தைச் செலவழித்து ஊழியர்களும் அலுவலர்களும் டெங்கு உள்ளிட்ட விழிப்புணர்வுப் பணிகளையும் குடிநீர் வழங்கல் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். எல்லை கடந்த நிலையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகள் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட கட்சித் தலைவர்களைச் சந்தித்து இத்தகைய அவலங்களுக்கான தீர்வு காண ஆவன புரியுமாறு கோரினர். அதனடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஊழல் புரிந்துவரும் ஊரகவளர்ச்சி இயக்குனர் பாஸ்கரன் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய நிதியை உடன் விடுவிக்கவும் தமிழக அரசை வலியுறுத்தினார். இதே கோரிக்கைகளை தி.மு.க,காங்கிரஸ் கட்சிகளும் வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. எனினும் தமிழக அரசிடம் எந்த அசைவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறியென கொஞ்சம் நிதியை விடுவித்துவிட்டு வழக்கம் போல் உறங்கிக் கிடக்கிறது மாநில அரசு.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத காரணத்தால்தான் மத்திய அரசின் நிதி விடுவிக்கப்படவில்லை என்பதும் ஒருபுறம் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாக உள்ளது. ஆனால் தமிழக ஆட்சியாளர்களின் கவலையெல்லாம் ஆட்சியைத் தக்க வைப்பதும் ஆட்சியை முழுமையாக எஞ்சிய 3 ஆண்டுகளுக்கும் ஆள்வதோடு ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்குத் தேர்தலை நடத்தாமல் முடிந்தவரை சுருட்டிச் செல்வது எனும் முடிவிலும் உள்ளனர். மூன்றடுக்கு ஊராட்சி நிர்வாகம் அனைத்தும் ஏற்கனவே வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் நிலையிலுள்ள அலுவலர்களைத் தனி அலுவலர்களாகப் பொறுப் பாக்கி செயல்படுகிறது. அவர்கள் ஏற்கனவே அதிக பணிச்சுமையில் உள்ள நிலையில் இத்தகைய தனிஅலுவலர் பொறுப்பினை கூடுதலாக மேற்கொள்ள இயலாமல் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர். பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத் திற்குரிய நிதி மத்திய அரசிடமிருந்து ஒழுங்காக வருவதில்லை. பசுமை வீடுகள் திட்டத்திற்குப் போதிய நிதியை மாநில அரசும் விடுவிப்பதில்லை. ஆனால் திட்ட இலக்குகளை சுவரின்றி சித்திரம் எழுதி முடிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் பயனாளிகளுக்கும் ஊரகவளர்ச்சித் துறை அலுவலர்களுக்கும் கசப்புணர்வே மேலோங்குகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சட்டப்படியாக தொடர்ந்து வழங்கவும் பேரூராட்சிகளுக்கு வழங்கவும் 100 நாட்கள் வேலையை 200 நாட்களுக்கு விரிவுபடுத்தவும் செங்கொடி விவசாயிகள் சங்கமும் விவசாய தொழிலாளர்கள் சங்கமும் போராடி வருகின்றன. ஆனால் இத்திட்டத்தை நிர்மூலமாக்கி வருகிறது மத்திய அரசு. கழிவறைகள் கட்டுதல், மத்திய மாநில அரசுகள் வழங்கும் இலவச வீடுகள், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அரசு கட்டிட கட்டுமானப் பணிகள் போன்றவற்றில் சித்தாள் வேலை எனப்படும் மனிதநாட்கள் 100 நாள் வேலை திட்டத்தில் கழித்துக் கொள்ளப்படுகின்றன. இவை உண்மையில் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்குப் போய்ச் சேருவதில்லை. எனவே ஏரி, குளம் கண்மாய், வரத்துக் கால்வாய், பாசனக்கால்வாய் தூர் வாருதல், இணைப்புச் சாலைகளுக்கான மண்வேலை என முன்பு வழங்கி வந்ததும், வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இத்திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த சட்டப் பாதுகாப்பும் ஏட்டோடு போனது. தொடர்ந்து இத்திட்டத்தில் வேலை வழங்கப் படாததற்கு வேலையில்லா காலத்துக்கான நிவாரணம் நீர்மேல் எழுத்தானது. அரசின் மோசமான மக்கள் விரோத கொள்கையால் அலுவலர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தேவையற்ற மோதல் போக்கே உருவாகிறது.

கட்டுமானப் பணிகளில் உள்ள மனித நாட்களின் இலக்கை முடிக்காததற்கு உயர் அலுவலர்கள் கீழ்நிலை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எல்லைமீறிய தொல்லை கொடுத்து வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறையின் சிக்கல் மிகுந்த அனைத்து திட்டங்களும் நிதி விடுவிக்கப் படாத நிலையிலும் ஏன் முடிக்கவில்லை என உயர் அதிகாரிகள் கொடுத்துவரும் தொல்லைகளின் விளைவால் பல மாவட்டங்கள் பல நிலையிலான அலுவலர்கள் மன அழுத்தத்திற்குள்ளாகி இறந்துபோயுள்ளனர். பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். சிக்கல்கள் மிகுந்த ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை குக்கிராமங்களுக்குக் கொண்டு செல்லும் ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகத் தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது.

ஊராட்சி செயலாளர்களின் ஒற்றை கோரிக்கையான இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் எனும் கோரிக்கையை முன்வைத்து 2017 மார்ச் மாதத்தில் 10 நாட்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத் தின்போது தமிழக அரசு ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. தொடர்ந்து கொடுத்த அமைப்பின் அழுத்தத்தினால் பட்ஜெட் மானியக் கோரிக்கையில் அறிவிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஓராண்டு காலமாக வாக்குறுதியை நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் கடத்தி வருகிறது. சட்டமன்ற மானியக்கோரிக்கையின்போது அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஜுன் 19 அன்று ஒட்டு மொத்த சிறுவிடுப்புப் போராட்டத்தை நடத்த முடிவெடுத்து அவ்வாறே வெற்றிகரமாக வரலாறு படைத்தது போராட்டம். எனினும் அரசு மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து தன் மெய்முகத்தை மீண்டும் காட்டியது. ஏற்கனவே ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை, பொறியியல் பிரிவில் சாலை ஆய்வாளர் முதல் பொறியாளர் வரை ஏராளமான கோரிக்கைகள் நிலுவையாக உள்ளன. முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள், கணினி உதவியாளர்கள் போன்ற தொகுப்பூதியம் மற்றும் அவுட்சோர்சிங் பணியாளர்களின் உழைப்பு பல்லாண்டுகளாக ஒட்டச் சுரண்டப்பட்டு வருகிறது.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான கடந்த ஆட்சியின்போது பிரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களைப் பிரிக்க பல்லாண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தனது சுய லாபங்களுக்காக ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களை பலிகடாவாக்கி வஞ்சித்து வருகிறது தமிழக அரசு. போதிய கால அவகாசம் வழங்காமல் போதிய ஊழியர்கள் இன்றி திட்டங்களை முடிக்க அலுவலர்கள் நிர்ப் பந்திக்கப்பட்டு அதன்விளைவாக மன உளைச்சலில் செக்கிலிட்ட எள்ளாய் பிழியப்படுகின்றனர் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஊழியர்கள்.இத்தகைய அசாதாரணமான அமைதியற்ற சூழலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை ஜுன் 22,23 தேதிகளில் கோவையில் கூடியது.அப்பேரவையில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள 26 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி முதல் நாளிலேயே ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை பொறியியல் பிரிவில் சாலை ஆய்வாளர் முதல் பொறியாளர் வரை இருபதாயித்துக்கும் மேற்பட்ட ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். அதன் விளைவாக அன்றைய தினமே மாநில நிர்வாகிகள் அரசின் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இயக்குனர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் இரண்டு மணிநேரம் பேசியும் எந்த ஒரு கோரிக்கைக்கான அரசாணையோ அல்லது எழுத்துப் பூர்வமான உத்தரவாதக் கடிதத்தையோ அரசு வழங்கவில்லை. இந்நிலையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தீவிரமாக நடத்த முடிவெடுத்து அவ்வாறே தமிழகம் முழுவதும் மூன்றடுக்கு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது.எனவே மேலும் கௌரவம் பார்க்காமலும் அரசின் வழக்கமான அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாமலும் ஏற்கனவே அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்குரிய அர
சாணைகளைப் பிறப்பித்தும் நிறைவேற்றத்தக்க கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவாதக் கடிதம் வழங்கியும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் அரசுக்கு நல்லது. பொதுமக்களுக்கும் நல்லது.

கட்டுரையாளர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க முன்னாள் பொதுச்செயலாளர்

Leave a Reply

You must be logged in to post a comment.