தீக்கதிர்

ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கும் போலீஸ்

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வழியாக விழுப்புரத்திலிருந்து கும்பகோணம் வரை நான்கு வழிச் சாலை பணிகள் நடைபெற்றுவருகிறது.

இதற்காக கண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலம் கையகபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அதேபகுதியில் 8 மீட்டர் அளவு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து கண்டமங்கலம், நவமால்காப்பேரி, பள்ளித்தென்னல், ஆழீயூர், கெங்கராம்பாளையம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் இரண்டாவது முறை நிலம் கையகபடுத்துவதை கைவிட வேண்டும், முதல் முறை கையகபடுத்திய நிலத்திற்கு 2015 புதிய சட்டத்தின் படி இழப்பீடு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று (ஜூலை 4)ஆர்ப்பாட்டம் நடத்த காவல் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் அனுமதி, உண்டா இல்லையா என்று தெரிவிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வந்திருந்தனர். அப்போது காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை எனக் கூறி அவர்களை கலைய செய்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் பி.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், சேதுராமன், சேகர் உட்படபலர் கலந்து கொண்டனர்.