லக்னோ;
உத்தரப்பிரதேசத்தில், 8-ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள தனியார் மருத்துவமனையின் உரிமையாளர், நோயாளி ஒருவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி நகரில் ‘ஆர்யான்’ என்ற தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையின் உரிமையாளர் நார்தேவ் சிங். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், பாஜக-வில் முக்கியப் புள்ளியும் ஆவார்.

இந்நிலையில், தனது மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவருக்கு, மருத்துவர்கள் மூலம் அல்லாமல், நார்தேவ் சிங்கே நேரடியாக அறுவைச் சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வெளியானது. அந்த வீடியோவில், கம்பவுண்டர் ஒருவர் நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்துவது போன்றும், நார்தேவ் சிங் அறுவைச் சிகிச்சை செய்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இது உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அரசு தலைமை மருத்துவர் அசோக் குமார், இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்தார். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த நார்தேவ் சிங், அறுவைச் சிகிச்சை அளித்தது உண்மைதானா? என்று அறிய குழு ஒன்றையும் அமைத்தார்.

ஆனால், இந்த குழுவினர், ஆர்யான் மருத்துவமனைக்கு விசாரணைக்கு சென்றபோது, விசாரணை நடத்தவிடாமல், பாஜக தலைவர் பவான் தாரர் என்பவர் கூட்டமாக வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். ஆபரேசன் தியேட்டருக்குள்ளும் மருத்துவக்குழுவினரை அனுமதிக்காமல் தகராறு செய்துள்ளனர். இதனால் விசாரணை நடத்த முடியாமலேயே மருத்துவக் குழுவினர் திரும்பி வந்துள்ளனர்.

நார்தேவ் சிங்-கிற்குச் சொந்தமான ஆர்யான் மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் மட்டும் 24 பேர் இறந்துள்ளனர். இதில் 3 நோயாளிகளின் குடும்பத்தினர், மருத்துவமனைக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதுமட்டுமன்றி, ஆர்யான் மருத்துவமனை அதன் விதிமீறல்களுக்காக ஏற்கெனவே 3 முறை சீல் வைக்கப்பட்டுள்ளது. எனினும், நார்தேவ் சிங்கின் தனது அரசியல் செல்வாக்கால் மீண்டும் மீண்டும் மருத்துவமனையைத் திறந்துள்ளார். இதன்மூலம் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியத்திலேயே- எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நார்தேவ் சிங், இன்று ஆபரேசன் செய்யும் அளவிற்கு போயிருக்கிறார். ஆனால், உத்தரப்பிரதேச பாஜக அரசு, அவர் மீது நடவடிக்கை எடுக்குமா? என்று தெரியவில்லை.

Leave A Reply

%d bloggers like this: