புதுச்சேரி,
வளர்ச்சி திட்டங்கள் இல்லாத பட்ஜெட்டை காங்கிரஸ் அரசு தாக்கல் செய்துள்ளது என புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கட்சியின் புதுச்சேரிபிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- புதுச்சேரி சட்டப் பேரவையில் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வளர்ச்சித் திட்டங்கள் இல்லாத, சமாளிப்பு பட்ஜெட் உரையாகவே உள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு சரியான நிதிக்கொள்கையும், துல்லியமான வருவாய் மற்றும் செலவின மதிப்பீடும் அவசியமாகும். அத்தகைய தன்மையில் பட்ஜெட் அமையவில்லை. கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளுக்கு மிகக்குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.

நடப்பாண்டில் 7530 கோடி வரவு -செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூபாய் 585 கோடி கூடுதல் தொகையாகும். மாநிலத்தின் சொந்த வருவாய் ரூபாய் 4570 கோடி பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்தெந்த வகையில் வருவாய் ஈட்டப்படும் என்பது வெளிப்படையாக கூறப்படவில்லை.ரூ. 7730 கோடியாக மாநிலத்தின் கடன் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனின் தலையில் ரூபாய் 57,259 கடன் உள்ளதாக பொருளாகும். ஏற்கனவே வாங்கிய கடனுக்காக நடப்பாண்டில் ரூ 1350 கோடி செலுத்த வேண்டியுள்ளது. நடப்பாண்டில் ரூ 1050 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் கடன் மேலும் அதிகரிக்கும் .

மத்திய பாஜக அரசும் மாநிலத்தை நிதிக்குழுவில் இணைக்கவும், உரிய நிதி ஒதுக்கவும், 7 வதுஊதியக்குழுவின் பரிந்துறை அமலாக்கத்திற்கு தேவையான நிதி வழங்கவும் மறுக்கிறது. மொத்தத்தில் மத்திய பாஜக அரசின் வஞ்சத்தாலும் , மாநில அரசின் சாகசத்தாலும் மாநிலத்தின் வளர்ச்சியும் , மக்கள் நலனும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.மாநில அரசு நிதி வருவாயை திரட்டுவதற்கும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கும் நேரடி உத்தரவாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குப்பை வரி, பாதாள சாக்கடை வரி, வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு என புதிய வரி உயர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பேருந்து கட்டண உயர்வு, மும்மடங்குமின் கட்டண உயர்வு என பட்ஜெட்க்கு முன்பாக அனைத்தையும் உயர்த்திவிட்டு வரி இல்லா பட்ஜெட் என கூறுவது ஏற்புடையது அல்ல. சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை துறைகளாக விளங்கும் கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்கல்,பொதுப்பணித்துறை ஆகியவற்றில் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்படுவதும், சில பணிகளை நிரந்தரமாக தனியாரிடம் விடப்போவதாகவும் அறிவித்து இருப்பது கண்டிக்கதக்கது எல்லாவற்றையும் தனியாரிடம் விடுவதற்காக மக்கள் இந்த அரசை தேர்ந்தெடுக்கவில்லை.

மேலும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மக்களுக்கு நேரடியாக சென்று சேர்வதற்கு அடிப்படையாக விளங்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பற்றி உறுதியான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. சிறப்பு கூறு நிதியில் சாதிமறுப்பு திருமணத்திற்கு உதவிநிதி 2.5 லட்சமாக உயர்த்தியுள்ளது வரவேற்கக் கூடியது. என்றாலும் பட்டியலின மக்களின் சமூகப்பொருளாதாரம் உயர்ந்திட தேவையறிந்து திட்டங்கள் வகுப்பது நிலம், கல்வி ஆகியவற்றில் கூடுதல் கவனம் இல்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில் நடப்பாண்டு 10 லட்சம் மனித வேலை நாட்களை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 15 நாட்கள் மட்டுமே வேலையளிக்கும் என்ற நிலை உள்ளது.இதனால் கிராமப்புற மக்களின் ஏழ்மையை, பிழைப்புக்காக இடம் பெயர்வதும் அதிகரிக்கும்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயகடன் ரத்து நடைமுறைக்கு வரவில்லை. 20கிலோ அரிசி திட்டமும் தடுமாறுகிறது. துணைநிலை ஆளுநர் உரையும் கூட அறிவிக்கப்பட்ட சமூகநல திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கப் படுவதாகவே குறிப்பிடுகிறது. முதல்வரின் பட்ஜெட்டிலும் அவ்வாரே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப் படுத்துவதற்கான முகாந்திரம் பட்ஜெட்டில் இல்லை.. இது மக்களை ஏமாற்ற கூடிய பட்ஜெட் ஆகும். மத்திய பாஜாகவின் மக்களை பாதிக்கிற திட்டங்களை எதிர்ப்பதாக வெளிப்படுத்திக்கொள்கிற காங்கிரஸ் அரசு மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் சிரமேற்று செயல்படுத்திவருவதாக ஆளுநர் உரையிலும் பட்ஜெட்டிலும் அம்பலமாகியுள்ளது. மாநிலத்தின் நிதி சுமையை போக்க, விவசாயிகளின் கோரிக்கைகளை தீர்க்க பஞ்சாலைகளை நவீனப்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க, சிறுவணிகர்களை பாதுகாக்க, முறைசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் ஏற்படுத்த நடவடிக்கை இல்லை. எனவே ஒரு சில புதிய அறிவிப்புகளை தவிர, புதுச்சேரி மக்களை ஏமாற்றும் வகையிலான சமாளிப்பு பட்ஜெட்டாகவே இது உள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.