சென்னை,
தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு தனது பங்கை தராமல் உள்ளது. மேலும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதால் மாணவர்கள் அந்த உதவித்தொகையை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியத்தின் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கணேசன் பேசுகையில், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது குறித்து விளக்கம் கோரினார். அதற்கு துணை முதலமைச்சர் அளித்த பதிலின் சுருக்கம் வருமாறு: தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை, மாநில அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்திற்கு 2017-18ல் ரூ.1,698 கோடி தேவைப் பட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.434 கோடி மட்டுமே வழங்கியது. இத்திட்டத்திற்கு மொத்தத்தில் மத்திய அரசு ரூ. 1841 கோடி பாக்கி வைத்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், மாநில அரசின் பங்கை ரூ.353 கோடியிலிருந்து ஆயிரத்து 526 கோடியாக உயர்த்தி உள்ளது. இதற்குமேல் செலவிடப்படும் பணத்தை மட்டுமே இனி மத்திய அரசு வழங்கும் என்றும் அறிவித்தது. இந்த விதி மாற்றங்களால் 31 ஆயிரம் பேர் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறும் தகுதியை இழந்துள்ளனர். அதேசமயம், இந்த விதி மாற்றங்கள் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், கல்வியியல் கல்லூரிகளுக்கும் பொருந்துமா என தெளிவுரையும் மத்திய அரசிடம் பெற வேண்டியுள்ளது. எனினும், ஏற்கெனவே பயன்பெற்றுவரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தொடர்ந்து கிடைக்கும்.

2018-19ஆம் ஆண்டில் புதிதாகச் சேரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்காது. சுயநிதி கல்வி நிறுவனங்கள் சில அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களையும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்த்து அதிக உதவித் தொகையை பெற்றுள்ளது தணிக்கையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும், அதிக மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களைவிட, குறைந்த மதிப்பெண் பெற்று நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்கும் ஒரு முரண்பாடான நிலையும் ஏற்பட்டது.எனவேதான், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைதான், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று ஆணையிடப்பட்டது. இதை எதிர்த்து 2 பேர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த திட்டத்திற்கு தேவையான நிதி ரூ.1,527 கோடி ரூபாயை இனி மாநில அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும். அதேநேரத்தில், மத்திய அரசின் இதர திட்டங்களைப்போல், நிதிப்பகிர்வை 60:40 என்ற விகிதாச்சாரத்தில் வழங்க வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.