சென்னை,
மத்திய அரசு பல்கலைகழக மானிய குழுவை மாற்றி விட்டு உயர் கல்வி ஆணையம் தொடங்க இருப்பதாக செய்தி வெளியாகி இருப்பது குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அரசின் கவனத்தை ஈர்த்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு பேசிய அவர், “தற் போது உயர் கல்விக்கு பல்கலைக்கழக மானிய குழு மூலம் தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த உரிமையை மத்திய அரசு பறித்து விட்டு உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க உள்ளது.

கேரள முதல்வரை அவமதிக்கும் பிரதமர்:
மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வரும் வெறுப்பு அரசியலின் மற்றொரு பகுதியாகும் இது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களை மற்றாந் தாய் மனப் போக்குடன் பார்க்கிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமரை சந்திக்க நான்கு முறை நேரம் கேட்டும் ஒதுக்கவில்லை. இதன் மூலம் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும். கல்விக்கான நிதி ஒதுக்கீடு இல்லாமல் போய்விடும். இதன் மூலம் மத்திய பாஜக அரசு மாநில அரசின் உரிமைகளில் புகுந்து விளையாட பார்க்கிறது” என்று கூறினார். தமிழ்நாட்டில் 13 பல்கலைக்கழகங் கள் உள்ளன. இதில் 12 ஆயிரம் பேர் ஆராய்ச்சி மாணவர்கள். 600 பேர் முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள். இவர்களுக்கிடையே உயர் கல்விக்கான சலுகைகள் பாதிக்கப்படும். எனவே மாநில
அரசு, மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு தகுந்த வகையில் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் கல்வி உரிமையை விட்டு கொடுக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு முதலமைச்சரும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து உயர்க்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், “உயர் கல்வி ஆணையம் அமைப்பதற்கான சட்டமுன் வடிவை மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருக்கிறார். முன்னதாக, மாநிலங்கள் சார்பில் தங்களின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் வருகிற 7-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக் கழக வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று 7-ந் தேதிக்குள் தமிழகத்தில் இருந்து அறிக்கை தாக்கல் அனுப்பப்பட்டது. இதில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். நமது தேவைகளை வலியுறுத்துவோம். எந்த சூழ்நிலையிலும் நமது உரிமைகள் பறிபோகாத அளவில் தமிழக அரசு செயல்படும்” என்றார்.

எதிர்க் கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், “பல்கலைக்கழக மானிய குழுவை கலைத்து விட்டு உயர் கல்வி ஆணையம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பழகன், “மத்திய அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது. இதில் நமது உரிமை எந்த அளவிலும் பாதிக்கப்படாத அளவுக்கு உரிய முயற்சிகள் எடுக்கப்படும்” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: