பாலன்பூர்:
ஜிஎஸ்டி அமலாக்கமும், வேலையில்லாத் திண்டாட்டமும்தான் பிரதமர் மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று ஜிக்னேஷ் மேவானி சாடியுள்ளார்.தலித் தலைவரும், குஜராத் மாநிலம் வடகாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி,

அம்மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்திலுள்ள பாலன்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:‘பிரதமர் மோடி, 2014 தேர்தலின் போது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றார். ஆனால், ஒருவருக்குக் கூட வேலை வழங்கவில்லை. இது நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் மீது மோடி நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் போன்ற வேறு சில சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளையும் மோடி நடத்தியுள்ளார்.

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-யால் விவசாயிகளின் வருமானம் உயரும்; விலைவாசி குறையும், கறுப்புப் பணம் ஒழியும் என்று கூறினார். அவையும் ஒன்றுமே நடக்கவில்லை. நமது ராணுவத்தினர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தியதை விட, மிகப்பெரிய சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்றால் அது பிரதமர் மோடி நாட்டு மக்கள் மீது நடத்திய தாக்குதல்களையே சொல்ல முடியும்.இவ்வாறு ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.