சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை (ஜூலை 4) கேள்வி நேரம்முடிந்ததும் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “நேபாளம்- திபெத் எல்லையில் உள்ள மானசரோவருக்கு யாத்திரை சென்ற இந்தியர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கன மழை, நிலச்சரிவில் சிக்கி தவிக்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து சென்ற 300 பேரும் அதில் அடங்குவர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் மரணமடைந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் காயத்ரி தேவியும் சிக்கியுள்ளார். அங்கு மருத்துவ உதவிகூட கிடைக்கவில்லை. நெருக்கடியில் தவிப்பதாக காயத்ரி தேவி கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- இமயமலையில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில், நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர்.

இந்தியாவிலிருந்து புனித யாத்திரை சென்ற 629 பேர் அங்கு மோசமான பருவநிலை காரணமாக சிமிகோட் என்ற இடத்திலும், 451 பேர் ஹில்சா என்ற இடத்திலும் 500 பேர் சீனாவின் திபெத் எல்லையிலும் சிக்கியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, தமிழ் நாட்டிலிருந்து புனித யாத்திரை சென்றவர்களின் நிலை குறித்து, தமிழ்நாடு அரசு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு, விவரங்களை கேட்டறிந்தனர். சென்னையிலிருந்து 19 பேர் கொண்ட குழுவினர், நேபாளத்தில் சிமிகோட் பகுதியில் இருப்பதாகவும், அவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல் பெறப்பட்டது. பருவநிலை மேம்பட்ட காரணத் தால், சிமிகோட் பகுதியிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 யாத்திரிகர்கள் விமானம் மூலம் நேபாளம் வந்தடைந்தனர்.

அங்கிருந்து யாத்திரிகர்களை தமிழ்நாட்டிற்கு உரிய முறையில் அனுப்பி வைப்பதற்கு, புதுதில்லி தமிழ்நாடு இல்லத்திலிருந்து இரண்டு அதிகாரிகளை நேபாளத்திற்கு செல்ல உத்தரவிடப்பட்டது. அவர்கள், இந்திய தூதரகம் மற்றும் நேபாள அரசின் ஒத்துழைப் போடு,  தமிழ்நாட்டை சேர்ந்த யாத்திரிகர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து, பாதுகாப்பாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இக்குழுவைச் சார்ந்த 18 பேர் தமிழ்நாட்டிற்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து சென்ற நான்கு யாத்திரிகர்கள் சிமிகோட் பகுதிக்கு திரும்பியுள்ளனர். அவர்களையும் தமிழ்நாட் டிற்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.

இது தவிர, தேனி மாவட்டத்திலிருந்து தனியே சென்ற 6 பேர் கொண்ட குழுவில், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த 69 வயதான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமச் சந்திரன், யாத்திரை முடிந்து திரும்பி வரும்போது, மூச்சுத் திணறி இறந்ததாக தகவல் பெறப்பட்டது. தற்போது அவரது உடல் நேபாள தலைநகர் காத்மண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  தகவல் தெரிந்த அவரது மகனும், மகளும் அங்கே சென்றுள்ளனர். அவரது உடலை இன்று அல்லது நாளைக்குள் அவரது சொந்த ஊருக்கு எடுத்துவர, நேபாள நாட்டின் காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேபாள நாட்டிற்கு, தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள அனைத்து யாத்திரிகர்களும் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: