புதுதில்லி;
மோடி ஆட்சியில், பொதுத்துறை வங்கிகள் பெரும் சீர்குலைவைச் சந்தித்துள்ள நிலையில், இந்த நெருக்கடியை சமாளிக்க எல்ஐசி நிறுவனத்தை பகடைக்காயாக்கும் முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாட்டின் நிதி நிலைமை மோசமாகும்போதும், பங்குச்சந்தை பாதிப்பு அடையும் போதும், எல்ஜசி நிறுவனத்தின் அதீத முதலீடு மூலம், அந்த பாதிப்பு சரிக்கட்டப்பட்டு வருகிறது. இது நீண்டகாலமாக நடந்து வருகிறது. ஆனால், மோடி ஆட்சியில் இது அதிகமாகி இருக்கிறது.
அந்த வகையில், தற்போது குடைசாய்ந்து நிற்கும் ஐடிபிஐ வங்கியின் 43 சதவிகித பங்குகளையும், பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யிடம் தள்ளிவிடும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. அதாவது, எல்ஐசி-யிடம் இருந்து ரூ. 13 ஆயிரம் கோடியை பிடிங்கி, ஐடிபிஐ வங்கியில் அளிக்க முடிவு செய்துள்ளது. இது தற்போது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.சாமானியர்கள், தங்களின் குடும்பத்தைக் காப்பாற்ற மாதந்தோறும் நூறும், ஆயிரமுமாய் எல்ஐசி-யின் காப்பீட்டுத் திட்டங்களில் சேமித்து வருகின்றனர். பெரிய முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்களும் எல்ஐசி-யிடம் காப்பீடு பெற்றுள்ளன. இவர்கள் அனைவருமே எல்ஐசி, தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என தற்போது கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளனர்.

ஏனெனில், ஐடிபிஐ வங்கியானது கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில், 3 ஆயிரத்து 199 கோடியே 77 லட்சம் நஷ்டத்தைச் சந்தித்து இருந்தது. அது நடப்பாண்டில் சுமார் 5 ஆயிரத்து 662 கோடியே 76 லட்சம் அளவிற்கு நஷ்டத்தைச் சந்தித்த வங்கியாகும். அதேபோல ஐடிபிஐ வங்கியின் வராக்கடன் மதிப்பு கடந்த நிதியாண்டில் 44 ஆயிரத்து 753 கோடியாக இருந்தது. இது தற்போது 55 ஆயிரத்து 588 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த ஓராண்டில் ஐடிபிஐ வங்கியின் மொத்த வருமானமும் 44 சதவிகிதம் சரிந்து, ஆயிரத்து 633 கோடியே 29 லட்சத்திலிருந்து, வெறும் 915 கோடியே 47 லட்சம் ரூபாயாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், சாமானியர்களின் முதலீட்டால் மட்டுமே இயங்கும் எல்ஐசி, அதிக நஷ்டத்தில் இருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்வது, எல்ஐசி-யிடம் காப்பீடு பெற்றுள்ள மக்களுக்கும், அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட தொகைக்கும் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே மக்களின் எதிர்ப்புக்குக் காரணம்.மோடி ஆட்சிக்கு வந்த பின்பு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் 21 பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய தொகையை எல்ஐசி முதலீடு செய்துள்ளது. ஆனால், அவற்றில் 18 நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே எல்ஐசி-க்கு அளித்துள்ளன.

எல்ஐசி-க்கு அனைத்துப் பொதுத்துறை வங்கி நிறுவனங்களிலும் 1 சதவிகிதத்திற்கும் அதிகமான முதலீடுகள் உள்ளன. பஞ்சாப் நேசனல் வங்கியின் 14.2 சதவிகித பங்குகளும், கார்ப்பொரேசன் வங்கியின் 13 சதவிகித பங்குகளும், அலகாபாத் வங்கியின் 10 சதவிகித பங்குகளும், ஐடிபிஐ, சிண்டிகேட் மற்றும் செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் 10 சதவிகித பங்குகளும் எல்ஐசி-யிடம் உள்ளன.

ஆனால், 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே 2015 டிசம்பருக்குப் பிறகு அதிக விலையில் உள்ளன. இந்தியன் வங்கி, விஜயா வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஆகியவைதான் அந்த நிறுவனங்கள். தனியார் வங்கிகள் சிலவும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான லாபத்தை எல்ஐசி-க்கு அளித்திருப்பதாக கூறப்படுகிறது. எச்டிஎப்சி வங்கி பங்குகள் 50 சதவிகிதம், யெஸ் வங்கி பங்குகள் 134 சதவிகிதம் வரை லாபம் அளித்துள்ளன.
ஆனால், பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளால் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.
2015 டிசம்பர் முதல் 2018 மார்ச் வரை பொதுத்துறை வங்கி நிறுவனப் பங்குகள் 8 சதவிகிதம் வரை சரிந்துள்ளன. தேனா வங்கி, யூகோ வங்கி மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கிகள் 60 சதவிகிதம் வரை மதிப்பினை இழந்துள்ளன.

நிலைமைகள் இவ்வாறெல்லாம் இருக்க, தற்போது ஐடிபிஐ வங்கியின் பங்குகளையும் வாங்குவது எல்ஐசி-க்கு சரியாக இருக்காது என்று அஞ்சப்படுகிறது. ‘எல்ஐசி ஏடிஎம்- ஆக மாறிவிட்டதோ’ என்று எம்டிஐ கல்லூரியின் நிதியியல் பேராசிரியரும் முதலீட்டாளருமான சஞ்சய் பக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக கேட்கிறார்.எல்ஐசி ஆரம்பம் முதல் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனமாகவே உள்ளது, ஆகையால் ஒரு வங்கி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குப் பங்குகளை வாங்குவதன் மூலம் எல்ஐசி நிறுவனம், வங்கியின் நேரடி நிர்வாகப் பொறுப்புகளுக்கு வர வேண்டியதாகிறது. ஆனால், எல்ஐசி நிறுவனத்திற்கு ஒரு வணிக வங்கியை நிர்வாகம் செய்யும் திறன் உள்ளதா என்பது மிகப்பெரிய கேள்வி. அப்படியே இருந்தாலும், அது இரட்டைச் சவாரியாகவே இருக்கும். அது நெடுந்தொலைவு செல்ல முடியாது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஐடிபிஐ பங்குகளை வாங்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.