திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உரிய வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டார். இதன்படிநகர்ப்புறங்களில் 1400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், கிராமப்புறங்களில் 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கும் வாக்குச் சாவடிகள் பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி இந்த வரைவுப் பட்டியலைப் பெற்றுக் கொண்டார். வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களின் அலுவலங்களான திருப்பூர் மாநகராசி அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் இருப்பின் அதனை வரும் 9-ஆம் தேதிக்குள் திருப்பூர் ஆட்சியருக்கும் கீழ்கண்ட அலுவலர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம். தாராபுரம் தொகுதிக்கு சார் ஆட்சியர், வட்டாட்சியருக்கும், காங்கயம் தொகுதியில் தாராபுரம் சார் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கும், அவிநாசி (தனி ) தொகுதியில் திருப்பூர் சார் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கும்,  திருப்பூர் வடக்கு தொகுதியில் திருப்பூர் சார் ஆட்சியர், வடக்கு வட்டாட்சியருக்கும்,திருப்பூர் தெற்கு தொகுதியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி உதவி ஆணையர்கள்,பல்லடம் தொகுதியில் திருப்பூர்சார் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கும், உடுமலைப்பேட்டை தொகுதியில் உடுமலை கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கும், மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை கோட்டாட்சியருக்கும் மற்றும் வட்டாட்சியரிடமும் எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம்.

இது தொடர்பாக வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட திங்கள்கிழமையில் இருந்து ஒரு வார காலம் 9-ஆம் தேதி வரை பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பாக வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை தொகுதி அளவில் வாக்காளர் பதிவு அலுவலர்களால் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கூட்டம் நடத்தப்பட்டு கருத்துகள் கேட்கப்படும்.  அதன் அடிப்படையில் வாக்காளர் பதிவு அலுவலர்களால் பரிந்துரை செய்யப்படும் அறிக்கையின் பேரில் மாவட்ட அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு மீண்டும் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளில் 2324 வாக்குச்சாவடிகள் உள்ளன. நகர்ப்புறத்தில் 80, கிராமப்புறங்களில் 77 என மொத்தமாக 157 புதிய வாக்குச்சாவடிகள் உத்தேசிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இவற்றையும் சேர்த்தால் 2481 வாக்குச்சாவடிகள் ஆகும். 40 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றவும், பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டதால் 50 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார். இதில் திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.