காஞ்சிபுரம்,
திருப்பெரும்புதூர் வட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புகுறை தீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சந்தவேலூர் பகுதியில் புதனன்று (ஜூலை 4) நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் ராஜூ தலைமையில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் ரமேஷ், சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தின் பேச்சி பயிற்சி நிபுணர் பிரபாகரன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும், சிகிச்சை முறைகள், நலத்திட்ட உதவிகள் எவ்வாறு பெறுவது என்பது குறித்து விளக்கினார்.

முகாமில் வருவாய் கோட்டாட்சியர் ராஜூ 15 மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை, 1 மாற்றுத்திறனாளிக்கு இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையையும், 3 பேருக்கு காதொலி கருவி, ஒருவருக்கு பிரைலி கைகடிகாரம் மற்றும் ஊன்றுகோல், ஒருவருக்கு நடைபயிற்சி மேற்கொள்வதற்கான உபகரணம் ஆகியவற்றை வழங்கினார். இதில், மருத்துவர் தென்றல், மண்டல துணைவட்டாட்சியர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் தாட்சாயினி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இதில் சுமார் 60 மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு சுய தொழில் தொடங்க நிதியுதவி வழங்கவேண்டும், தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும், மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.