கோவை,
கோவையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்த ஆலோசனை வழங்கிய லண்டனில் உள்ள இளைஞரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாட கோவை காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் சிறிய கேமராவை பொருத்தி, ஏடிஎம் கார்டுகளின் தகவல்களை திருடி ரூ.19 லட்சத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கோவை சைபர்கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பின்னர் தனிப்படைஅமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நவசாந்தன் (29), நிரஞ்சன் (38), தமிழரசன் (36), வாசீம் (39), கிஷோர் (25), மனோகரன் (19) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலிடமிருந்து 20 போலி ஏடிஎம் கார்டு, லேப்டாப், ஏடிஎம் கார்டு செய்யும் கருவி, ரூ.19 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், இக்கும்பல் தமிழகத்தை தவிர கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தங்களின் கைவரிசையை காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கோவை சிறையில் அடைக்கப்பட்ட 6பேரையும் காவல்துறையினர் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பலுக்கு இலங்கை அகதியான நவசாந்தன் தலைவனாக செயல்பட்டுள்ளான். இவருக்கு லண்டனை சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், நவசாந்தனும், லண்டனில் உள்ள இளைஞரும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம். லண்டன் வாலிபர் தான் நவசாந்தனுக்கு ஏடிஎம் மெஷினில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி ஏடிஎம் கார்டின் தகவல்களை திருடும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்து ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த ஏடிஎம் மோசடியில் லண்டன் வாலிபருக்கும் தொடர்பு உள்ளது. வாலிபரின் ஆலோசனையின்படியே இக்கும்பல் தங்களின் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.மேலும் அந்த வாலிபர் தமிழகம் வந்து நவசாந்தனிடம் பணமும் வாங்கி சென்றுள்ளார். எனவே அவரை பிடித்து தமிழகத்திற்கு கொண்டுவர உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதற்காக இன்டர்போல் உதவியை நாடும் திட்டமும் உள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு காவல்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.