பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிவதற்காக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டிருக்கும் இந்திய உயர்கல்வி ஆணையம் குறித்த வரைவு சட்ட மசோதா பற்றிய விவாதம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தால் கடந்த இரண்டாம் தேதி நடத்தப்பட்டது. உயர்கல்வியைக் கட்டுப்படுத்துகின்ற மிகப் பெரிய நிறுவன அமைப்பை உருவாக்குவதை உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு முன்னிறுத்துகின்ற வேளையில், ஏற்கனவே இருக்கின்ற நிறுவனமான பல்கலைக்கழக மானியக் குழுவில் இருக்கின்ற பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டத் தவறியிருக்கிறது என்பது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் கருத்தாக இருந்தது. மாறி வருகின்ற தேவைகளை எதிர்கொள்வதற்காக இத்தகைய ஆணையம் தேவைப்படுவதாக சட்ட வரைவில் கூறப்பட்டிருந்தாலும்கூட, அத்தகைய தேவைகள் என்னவென்பது சுட்டிக்காட்டப்படவில்லை என்பதோடு, பல்கலைக்கழக மானியக் குழுவைச் சரி செய்வதற்கான வேலைகள் செய்யப்படாமல், மிகவும் அவசரமாக மாற்று நிறுவன அமைப்பை ஏற்படுத்துவதற்கான அவசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே ஒருமித்த கருத்து கொண்டிருந்தனர்.

புதிய வரைவுச் சட்டமானது 1956ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தில் புதிதாக முன்னேற்றங்கள் எதையும் செய்யாமல், வெறுமனே கண்காணிப்பிற்கு முக்கியத்துவம் தருகின்ற வகையில் இருப்பது என்பது பின்னோக்கி எடுத்து வைத்த அடியாகவே இருக்கிறது. நிதி உதவி அளிப்பது மட்டுமல்லாது, பல்கலைக்கழகங்களுடன் பரந்த அளவில் விவாதிப்பதற்கான வழிமுறைகளைக் கொண்டதாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழுச் சட்டமானது இருக்கிறது. மேலும் அது கல்வி சார்ந்தவர்களுக்கு அதிக இடமளிப்பதாகவும் இருக்கிறது.  இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வரைவு மசோதாவில் நிதி உதவி என்பது மையப்படுத்தப்பட்டு அமைச்சகத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விவாதிப்பதற்கான இடமும் அங்கே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அனைத்து அதிகாரங்களையும் கொடுக்கின்ற வகையில் புதிதாக உருவாக்கப்படுகின்ற இந்திய உயர்கல்வி ஆணையமானது, இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கெதிரான முறையில் வேறுபாடுகளை அனுமதிக்காத வகையில் இருக்கிறது. மேலும் சமூக, பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்கான உரிய இடங்களை அளிக்காது அதிகாரத்துவம் மிக்கதாக, முற்றிலும் வளைந்து கொடுக்காத தன்மையுடன் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள், நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றின் மீது பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் முற்றிலும் மாறான மாற்றங்களைக் கொண்டு வரவிருக்கின்ற நிலையில், பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தர வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்புகள், உயர்கல்வி சார்ந்து இயங்குகின்ற சமூக நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் ஆகியவற்றிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது. பல்கலைக்கழகத்திடமும், அமைச்சகத்திடமும் விரைவில் தன்னுடைய கருத்துக்களை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதிர் கே.சுதர்
செயலாளர்

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

-தமிழில்:முனைவர் தா.சந்திரகுரு,விருதுநகர்.

Leave a Reply

You must be logged in to post a comment.