சென்னை,
சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் சிவக்குமார் என்கிற தாயகம் கவி,“மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இரு சமூக மக்களிடையே நீண்ட நெடுங் காலமாக நிலவி வந்த சாதி என்னும் தீண்டாமை சுவரை அகற்றி இரு சமூக மக்களும் சுமுகமாக வாழ வழி வகுத்ததும், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டகாய்ச்சியேந் தல் ஆகிய 4 ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தியது திமுக ஆட்சியின் சாதனைகளாகும். ஆனால், இவை அனைத்தும் இந்த ஆட்சியில் வேதனையாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த துறையின் கொள்கை விளக்க புத்தகத்தின் பக்கம் 70யிலிருந்து 108 ஆக உயர்ந்துள்ளதே தவிர ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை” என்றார்.

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 1,15,703 ஆக இருந்து கடந்த மூன்றாண்டுகளில் 98 ஆயிரத்து 246 ஆக குறைந்துவிட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 10,891-ல் இருந்து 9,272 ஆக குறைந்துள்ளது. சேர்க்கை, தேர்ச்சி விழுக்காடுதான் குறைந்துள்ளது. உதாரணத்திற்கு, எனது தொகுதியான சென்னை திரு.வி.க நகரில் உள்ள கண்ணையாபுரம் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் வரலாறு, வேதியியல், கணிதம், உயிரியல் பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர் கிடையாது. இதே பகுதியிலுள்ள பெண்கள் பள்ளியில் கடந்த ஒரு வருடமாக தலைமை ஆசிரியரே கிடையாது. வகுப் பறைகளுக்கு மின் விசிறி, மின் விளக்குகள் இல்லை. தண்ணீர் வசதி கிடையாது. மாணவர்கள் விளையாட உபகரணங்கள் இல்லை. கணினி வகுப்பு இருந்தும் கம்ப்யூட்டர் கிடையாது. மாநிலம் முழுமைக்கும் உள்ள பள்ளிகளின் நிலைமையும் பராமரிப்பு பணியும் இப்படிதான் இருக்கிறது. இந்த துறைக்கு சொந்தமான விடுதிகளின் நிலைமையும் படுமோசமாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டு என்றால், மீன்வளத்துறை அமைச்சரின் சொந்த தொகுதியாகும் ராயபுரம்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட துறை அமைச்சர் ராஜலட்சுமி, “ஆதிதிராட மக்கள் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளனர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்ததால் பொதுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளார்கள். நலத்துறை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முயற்சிகள் எடுக்கப்படும்” என்றார். அமைச்சர் செங்கோட்டையன், “ஆதிதிராவிடர் மாணவர்களின் வாழ்க்கை, கல்வித் தரம் குறையவில்லை. நலத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சேர்க்கை குறையவில்லை. 20 முதல் 25 விழுக்காடு ஆதிதிராவிட மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர்” என்றார்.உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்,“நலத்துறை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை என்றும் உயர்க் கல்வி படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களின் எண்ணிக்கை இந்திய சராசரி அளவைவிட தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது இதற்கு உதாரணம் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.