மே.பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே அரசு பள்ளியை மூடி விடாமல் தடுக்க ஊர் மக்கள் சார்பில் தங்க நாணயம், ரொக்கப் பரிசுத்திட்டம் அறிவித்து மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் ஒன்றியம், கோனார்பாளையம் கிராம துவக்கப்பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக ஆறு மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அதிலும் கடந்த கல்வியாண்டு முடிவில் ஐந்தாம் வகுப்பு முடித்த இரண்டு மாணவர்கள் உயர்நிலைப்பள்ளிக்கு சென்று விட்டதால் மாணவர் எண்ணிக்கை வெறும் நான்காக குறைந்தது. மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்ததால் பள்ளி மூடப்படும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கிராம மக்கள் ஒன்றுகூடி பள்ளி வளர்ச்சிக்குழு என்ற குழுவினை அமைத்து தங்களது கிராம பள்ளி மூடப்படுவதை தடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் திட்டமும் அறிவிக்கப்பட்டு புதிய மாணவர் சேர்க்கையில் களம் இறங்கினர். இதன்படி, இப்பள்ளியில் முதலில் சேரும் பத்து பேருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பள்ளியில் சேரும் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் இரண்டு செட் பள்ளி சீருடை வழங்கப்படும் என பள்ளி வளர்ச்சி குழு அறிவித்துள்ளது.

மேலும், பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வாகன வசதியினையும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை நோட்டீசாக அச்சடித்து பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் விநியோகித்துள்ளனர். இதன் பலனாக இரு மாணவியர் உட்பட மூன்று பேர் பள்ளியில் சேர்ந்ததையடுத்து மாணவர் எண்ணிக்கை தற்போது ஏழாக உயர்ந்துள்ளது.மேலும், ஐந்து மாணவர்கள் பள்ளியில் இணையவுள்ளதையடுத்து மாணவர் எண்ணிக்கை பன்னிரெண்டாக அதிகரித்துவிடும். இதனால் இப்பள்ளி மூடப்படும் அபாயத்தில் இருந்து தப்பும் என ஊர் மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மாணவர் குறைவு என தங்களது ஊர் அரசுப்பள்ளி மூடப்பட்டால் பின்னர் வருங்காலத்தில் மீண்டும் இங்கு பள்ளி அமைவது சாத்தியமில்லை என்பதை கருத்தில் கொண்டு இப்பள்ளியில் பயின்று தற்போது நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள், ஊர் பெரியவர்கள் என பலரும் ஒன்று கூடி எடுத்துள்ள இம்முயற்சி பல்வேறு தரப்பிலும் பாராட்டை பெற்றுள்ளது. இதுபோல மாணவர் எண்ணிக்கையில் குறைந்துள்ள அரசு பள்ளிகளை முன்னேற்றவும் மாணவர் எண்ணிகையை உயர்த்தவும் அந்தந்த ஊர் மக்கள் முயற்சி எடுப்பதும் அதற்கு பள்ளி கல்வித்துறையினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ் சந்திரகுமார் கூறுகையில், அரசுப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்குஇணையாக ஆங்கில வழிக்கல்வி கொண்டு வந்தாகிவிட்டது, மேலும், இசைக்கல்வி, யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இருப்பினும் மாணவர் சேர்க்கை அதிகரிக்காததன் காரணமாக தற்போது வேறு வழியின்றி தங்க நாணயம், ரொக்கப்பரிசு என அறிவித்து மாணவர்களை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவிக்கிறார்.

(ந,நி).

Leave a Reply

You must be logged in to post a comment.