காஞ்சிபுரம்,
சேலம் முதல் சென்னை வரையிலான எட்டுவழி பசுமை சாலைக்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று மிரட்டும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை முதல் சேலம் வரை அமைக்கப்படும் எட்டுவழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்படவுள்ளது. அப்போது நில உரிமைதாரர்கள் அல்லாதவர்கள் குறிப்பாக வெளியூர் நபர்கள் ஊடுருவி நில உரிமைதாரர்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டாலும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலும் அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக் கப்படுவார்கள். இதற்காக பயன்படுத்தப்படும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.

இதுகுறித்து கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், ஜனநாயக விரோத அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள் ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர் ஆகிய வருவாய் வட்டங்களிலுள்ள 46 ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 52 கிமீ தூரம் பசுமை வழிச் சலைக்கு நிலம் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி கருத்துக்களை கேட்காமல் நிலம் அளவீடு செய்வதற்காக கல் நடப்பட்டு வருகிறது.

அரசியல் சட்ட வரம்பு மீறல்:
மாவட்ட ஆட்சியரின் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் இதுபற்றி கேட்கப்பட்டதற்கு கையகப்படுத் தப்படவுள்ள நிலத்திற்கான புல எண்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு முன்னறிவிப்பு கடிதம் கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. அவ்வாறு எவ்வித அறிவிப்பும் வெளியிடப் படாத நிலையில் இந்த நிலம் எடுப்புக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் குறிப்பாக வெளியூர் நபர்கள் யாரும் வரக்கூடாது எனவும், மக்களிடம் பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும், மீறினால் கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார்கள் என்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என மிரட்டும் தோனியில் வெளியிடப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியரின் அறிக்கை அரசியல் சட்ட வரம்புக்கு மீறியதாகும்.

கைது செய்தவர்களை விடுதலை செய்க:
ஜனநாயக குரல் வலையை நெறிப்பதாகும் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் செவ்வாயன்று துண்டுப் பிரசுரம் விநியோகித்த தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் மன்றம், பாலாறு பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஜனநாயக நாட்டில் சட்டப்பூர்வ கருத்துரிமையை மறுக்கும் செயலாகும்.எனவே இவர்கள் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்துசெய்து அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.