அரக்கோணம்,
அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு காலை 6.40 மணிக்கு விரைவு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை வரை செல்லும் இந்த ரயிலில் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மின்சார ரயில் தாமதமாக வருகிறது. இதனால் பணிக்கு செல்பவர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாயன்று காலை ஏராளமான பயணிகள் சென்னை செல்வதற்காக அரக்கோணத்தில் காத்திருந்தனர்.6.40 மணிக்கு வரவேண்டிய மின்சார ரயில் நீண்ட நேரமாக வரவில்லை. இதனால் பயணிகள் ஆத்திரமடைந்தனர்.அப்போது 7.30 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் 3வது நடைமேடைக்கு வந்தது. சென்னை ரயிலுக்கு காத்திருந்த பயணிகள் இந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனே அங்கு வந்த ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பயணிகளிடம் பேச்சு நடத்தினர்.

“ தினமும் ரயில் தாமதமாக வருகிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை’’ எனக் கூறிய பயணிகள் ரயில் சரியான நேரத்தில் வந்து செல்லும் என அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என்றனர்.உடனே ரயில்வே அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டனர். தொடர்ந்து தாமதமாக வந்த மின்சார ரயிலில் அனைவரும் புறப்பட்டு சென்றனர். ரயில் மறியல் போராட்டத்தால் சப்தகிரி எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதமாக சென்றது.மேலும் சென்னை-பெங்களூர், கோவை மார்க்கத்தில் செல்லும் ரயில்களும் தாமதமாக சென்றன.

அரக்கோணத்தில் இருந்து தினமும் மாலை 6.05 மணிக்கு செல்லும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக செல்கிறது. இதை கண்டித்து அரக்கோணத்தில் பயணிகள் சமீபத்தில் ரயில் போராட்ட மறியலில் ஈடுபட்டனர்.கடந்த வாரம் சோளிங்கபுரம் ரயில் நிலையத்தில் ரயில்கள் தாமதமாக வருவதாகக் கூறி பயணிகள் மறியல் செய்தனர். தினமும் ரயில்கள் தாமதமாக வருவதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதுபோன்ற காலதாமதத்தை தவிர்த்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: