சென்னை,
2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்தவும் மின்சக்தியில் (பேட்டரி) இயங்கும் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது குறித்து இந்திய ஃபோர்ஜிங் தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

அரசின் இந்தநோக்கம் இத்தொழில்துறையின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய மற்றொரு முக்கிய பிரச்சனையாக உள்ளது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய, இந்திய ஃபோர்ஜிங் தொழில்கூட்டமைப்பின் (ஏஐஎஃப்ஐ) தலைவர் எஸ்.முரளிகிருஷ்ணன் கூறினார். அரசின் திட்டம் தெளிவில்லாமல் உள்ளதால் இந்த துறையை நம்பியுள்ள ஏராளமான தொழில் நிறுவனங்களும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். எனவே இதுகுறித்து ஒரு தெளிவான எதிர்கால திட்டத்தை அரசு உருவாக்குவது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்வது போர்ஜிங் தொழில்துறைக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏனெனில் 60விழுக்காடு ஃபோர்ஜிங் தொழிலகங்கள் ஆட்டோ உதிரிபாகங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. அவைகளுள் பெரும்பாலானவை இஞ்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தொடர்பான பயன்பாட்டுக்கானவை. இதன் விளைவாக, ஃபோர்ஜிங் செய்யப்பட்ட ஆட்டோ பாகங்களுக்கான தேவை சராசரியாக 40 முதல் 50 விழுக்காடு சரிவடையும். இதனால் தொழிலாளர்கள் வேலையை இழப்பதோடு தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்று ஏஐஎஃப்ஐ தென்மண்டல தலைவர் கே.வினோத்குமார் கூறினார். ஃபோர்ஜிங் தொழில்துறை சந்திக்கும் சவால்கள் குறித்து விவாதிக்க சென்னையில் 7வது ஆசியா ஃபோர்ஜிங் மாநாடு வரும் ஜனவரி மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.