புதுச்சேரி,
மாநில அந்தஸ்தா அல்லது சிறப்பு மாநில அந்தஸ்தா என்பது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியது. ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் நாராயணசாமி பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- அரசுக்கு எப்படி வருவாய் வருகின்றது? துறைகளுக்கு எப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது? என்று அனைத்துக் கட்சி தலைவர்களை அழைத்து தெரிவித்தோம். அதில் சட்டமன்றத்தில் உள்ள கட்சிகள் கூட பங்கேற்கவில்லை.புதுச்சேரிக்கு 90 விழுக்காடு மானியம் அளித்து வந்த மத்திய அரசு, தனி கணக்கு தொடங்கிய பின்னர் 30 விழுக்காடாக குறைத்து விட்டது. புதுச்சேரி அரசே 61 விழுக்காடு வருவாய் ஈட்டுகிறது. கடந்த ஆண்டு ரூ.550 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளோம்.

பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.700 கோடி அளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. செயல்பாடுகள் குறித்து துறை ரீதியான விவாதத்தில் அமைச்சர்கள் பேசுவார்கள். இரட்டை ஆட்சி நடைபெறுவதாகவும், அரசு நிர்வாகத்தை சிலர் கையகப்படுத்துவதாகவும் கூறுகின்றனர். நானும், அமைச்சர்களும் ஒரு நாளும் விதிமுறை மீறி எந்த முடிவும் எடுத்தது இல்லை. அதிகார துஷ்பிரயோகத்தை சுட்டிக்காட்டி தவரை திருத்திக் கொள்ளக் கூறி வருகின்றோம். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் இயற்கை விவசாயத்தை ஆதரித்து வருகின்றோம். இதனால் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.1500 விலை கிடைப்பதற்குப்பதிலாக ரூ.2400 விவசாயிகளுக்கு கிடைக்கிறது. விவசாயிகள் கூட்டுறவு கடன்களில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய எடுத்த நடவடிக்கையில் எவ்வளவு தடைகள் வந்தது. அதை மீறி ரூ.21 கோடி கடனை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளோம். மத்திய அரசிடம் இருந்து வறட்சி நிவாரணம் பெற்றுகொடுத்துள்ளோம். இன்சூரன்ஸ் தொகையும் பெற்று கொடுத்துள்ளோம். பிற மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஏதேனும் ஒன்றுதான் பெற்று கொடுக்கப்பட்டது.

ஆனால் புதுச்சேரியில் விவசாயிகளுக்கு மூன்று பலன்களை பெற்று கொடுத்துள்ளோம். சிறப்பு மாநில அந்தஸ்து என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சிலர் மாநில அந்தஸ்து வேண்டும், சிலர் சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் எனக் கூறுகின்றனர். இதனால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும். அப்போதுதான் ஒரு தெளிவு கிடைக்கும். ஜிஎஸ்டியில் புதுச்சேரி ஒரு மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்கள் இங்கு இல்லாததால் புதிய தொழிற்கொள்கை அறிவித்தும் தொழிற்சாலைகள் வரவில்லை. இதனால் மத்திய அரசிடம் சலுகை கேட்டுள்ளோம். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய சவால் உள்ளது. அதற்கான கோப்புகளை திருப்பி அனுப்பலாம். ஆனால் தடுத்து நிறுத்திவிட முடியாது. கோப்புகளை திருப்பி அனுப்பும்போதே அனைத்து கேள்விகளையும் கேட்க வேண்டும்.

பல முறை சில கேள்விகளை கேட்டு திருப்பி அனுப்பக்கூடாது. முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி விட்டுச்சென்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக திட்டத்தினை செயல்படுத்த தேவையான அதிகாரிகளை நியமிப்பது, மத்திய அரசிடமிருந்து நிதி கொண்டு வருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளோம். குடிநீர் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, மக்களின் நல்வாழ்விற்கான குறுகிய காலத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. எங்கள் முயற்சியின் அடிப்படையில் திட்டம் கொண்டு வரும்போது முட்டுக்கட்டை போட்டு சட்டசபையை விட்டு வெளியேறி வெளியில் சென்று பேட்டி அளிக்கின்றனர்.

 கடந்த காலங்களில் 60 லிருந்து 70 விழுக்காடு நிதி செலவு செய்தது கிடையாது. நாங்கள் 97 சதவிகிதத்தை வைத்து செலவு செய்து நிதி ஆதாரத்தை பெருக்கியிருக்கிறோம். எங்களது ஆட்சி வெளிப்படையான நிர்வாகம். இதுபோன்ற முட்டுக்கட்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக தகர்க்க வேண்டிய காலம் வந்துவிட்டது. விதிமுறைக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுகிறோம். ஆளுநர் உரைக்கு நன்றி சொல்வது என்பது ஒரு பாரம்பரியமான ஒன்று. எனவே உறுப்பினர்கள் அவரது உரைக்கு நன்றி கூற ஏகமனதாக ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: