வேலூர்,
வேலூர் மாவட்டம், பனப்பாக்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 984 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக ஆதிமூலம் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 208 மாணவர்கள் 12ஆம் வகுப்பு படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை. இதனால் கோபமடைந்த மாணவர்கள் பனப்பாக்கத்தில் இருந்து ஓச்சேரி செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் கூறுகையில், நாங்கள் 12ஆம் வகுப்பு படித்து வருகிறோம். எங்களுக்குப் பள்ளியில் பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை. இந்த ஆண்டு எங்களது தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு தமிழ், வேதியியல், வேளாண்மை ஆகிய பாடங்களை நடத்த ஆசிரியர்கள் இல்லை. குறிப்பாக தமிழ் பாடத்துக்கு 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள் இல்லை. இதேபோல் வேதியியல் பாடத்துக்கு 2 ஆண்டுகளாக ஆசிரியர்கள் இல்லை” என்றனர். காவல்துறையினர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் வகுப்புக்கு திரும்பினர்.